7 மாதக் குழந்தை மரணம்: காப்பக ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்:

பண்டார் கின்ராராவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 28 வயது காப்பக ஊழியர் மீது இன்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த மே 5-ஆம் தேதி காலை 10.40 மணியளவில், பூச்சோங், பண்டார் கின்ராராவில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில் முகமட் ஈடன் ஃபஹீம் முகமட் நோர் ஷஃபிக் என்ற ஏழு மாதக் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக அந்தக் காப்பகத்தில் பணியாற்றிய பல்கிஷ் முகமட் டிசையான் (Balqish Mohammad Dzyhan) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இன்று வியாழக்கிழமை, மஜிஸ்திரேட் ஃபரா அசுரா முகமட் சாத் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக சைகை காட்டிய பல்கிஷ், அமைதி காத்தார்.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் (Section 302 of the Penal Code) கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை (Mention) ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here