மின்சார அடுப்பின் கம்பியை இழுத்த 5 மாதக் குழந்தை: உடல் வெந்து படுகாயம் – பெற்றோர் கதறல்!

கோலாலம்பூர்:

மலேசியாவின் பிந்துலு, சுங்கை பிளான் (Sungai Plan) பகுதியில், மின்சார அடுப்பின் கம்பியை இழுத்ததில் கொதிக்கும் கஞ்சியும் தண்ணீரும் மேலே கொட்டி, 5 மாதக் குழந்தை ஒன்று உடல் வெந்துபோன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 8-ஆம் தேதி காலை 7 மணி அளவில் இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தையின் தந்தை முகமட் பிரிஜினி (39) வீட்டின் பின்புறம் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது மனைவி தயாங் நோர்லிசாவதி (35) சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, அவர்களின் 5 மாதக் குழந்தையான முகமட் ஃபிராஸ் ஐசி (Mohammad Firas Aisy), ‘பேபி வாக்கரில்’ அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தது.

சமையலறையில் சாதம் வெந்துகொண்டிருந்தபோது, யாருடைய கவனமும் இல்லாத நேரத்தில், குழந்தை மின்சார அடுப்பின் (Rice Cooker) தொங்கிக்கொண்டிருந்த கம்பியை இழுத்துள்ளது. இதில் கொதிக்கும் சாதமும் தண்ணீரும் அப்படியே குழந்தையின் உடல் மீது சரிந்து விழுந்தது.

சமையலறையில் ஏதோ விழும் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், குழந்தை உடல் வெந்து கதறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதில் குழந்தையின் மார்பு, கைகள், இரு தொடைகள், இடது கால் மற்றும் முகம் என உடலின் பெரும்பாலான பாகங்கள் கடுமையாகக் கருகியுள்ளன.

குழந்தை உடனடியாக நியாபாவ் (Nyabau) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அவசரப் பிரிவின் ‘சிவப்பு மண்டலத்தில்’ (Red Zone) அனுமதிக்கப்பட்டது.

நேற்று காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை (Skin Graft Surgery) செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தீக்காயங்களுக்கான சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளில் கடைக்குட்டி மகனாகப் பிறந்த ஐசியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்ததாகத் தெரிவித்த தந்தை முகமட் பிரிஜினி, “ஒரு கண நேரக் கவனக்குறைவால் இந்த விபரீதம் நடந்துவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.

தன் மகன் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் மின்சாரக் கம்பிகள் மற்றும் சுடுநீர் சாதனங்கள் எட்டாத உயரத்தில் இருப்பதை உறுதி செய்வது மிக அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here