1,330 குறள்களை ஒப்புவித்து வரலாற்றுச் சாதனை மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் முன்னெடுத்த 1330 திருக்குறள் ஒப்புவிப்பு நிகழ்வு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று வரலாறு படைத்தது.இந்த சாதனையை அங்கீகரித்து,மலேசிய சாதனைப் புத்தகத்தின் நிர்வாக அதிகாரி மேனாகா வடமலை , அதிகாரபூர்வ நற்நான்றிதழை வழங்கினார். தமிழ் மொழியின் பெருமையையும், உலகப்பொதுமறையான திருக்குறளின் உயரிய பண்பாட்டு மரபையும் உலக அரங்கில் மீண்டும் நிலைநிறுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.8 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 1,462 மாணவர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து திருக்குறளை ஒப்புவித்தது நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.
இந்த நிகழ்வில் 156 தமிழ்ப்பள்ளிகள், 120 தேசிய வகை இடைநிலைப்பள்ளிகள், 85 தேசியப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமையையும், தமிழ் மொழிப் பற்றையும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வு குறித்து தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் செல்வராஜ் செல்வம் கூறுகையில், “தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தின் மீது நம் சமூகம் கொண்டுள்ள ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாகவே இந்த நிகழ்வு அமைந்துள்ளது.திருக்குறள் என்பது தமிழ் மக்களின் அடையாளம் மட்டுமல்ல, உலக மனிதகுலத்திற்கான வாழ்வியல் வழிகாட்டியாகும்,” என அவர் கூறினார்.
மேலும், நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விக்னேஸ்வரன் ஐயப்பன் பேசுகையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி எதிர்கால தலைமுறையினர் திருக்குறளின் உயரிய நெறிமுறைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் அறிந்து வளர்வதற்கு மிகப்பெரிய தூண்டுகோலாக அமையும். அதேவேளை, நாட்டின் பல்லின மக்களிடையே கலாச்சார நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்தும்,” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசனின் பிரதிநிதியாக அவரது சிறப்பு அதிகாரி
உ. முத்துசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தம் உரையில், “திருக்குறளை உலகளவில் எடுத்துச்செல்லும் இத்தகைய முயற்சிகள் தமிழ் சமூகத்தின் பெருமையை உயர்த்துகின்றன.  இந்த சாதனையை உருவாக்க உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்,” என கூறினார்.
மேலும், இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் 20 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருக்குறளின் ஒவ்வொரு குறளும் மனித வாழ்வுக்கான ஒழுக்க நெறிகளையும் உயரிய சிந்தனைகளையும் எடுத்துரைப்பதால், இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களிடையே தமிழ் இலக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் மரபு செல்வத்தை பாதுகாக்கும் முக்கிய தளமாகவும் அமைகின்றன என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.நேற்று காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடையறாது நடைபெற்ற இந்நிகழ்விற்கு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,  சமூக ஆர்வலர்கள் என சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேராதரவு வழங்கினர்.இந்த வரலாற்றுச் சாதனைக்கு பின்னால் உழைத்த ஏற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here