“காட்டிய உடையை விட ஷூட்டிங்கில் குறைப்பாங்க”- சினிமா ரகசியங்களை உடைத்த மும்தாஜ்

டி.ராஜேந்தர் இயக்கிய ‘மோனிஷா என் மோனலிசா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் மும்தாஜ். மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாதன், லூட்டி, ஸ்டார், வேதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் குத்தாட்ட பாடல்களிலும் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மும்தாஜ் திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் மறைமுக அழுத்தங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பேட்டியில் பேசிய அவர், நடிகையாக இருந்த காலத்தில் தன்னுடைய வாழ்க்கையும், திரைப்பட வாய்ப்புகளும் முழுமையாக இயக்குநர்களின் முடிவுகளிலேயே இருந்ததாக கூறினார். படப்பிடிப்புக்கு முன்பு காட்டப்படும் உடைகளும், நேரடியாக படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்படும் உடைகளும் வேறுபட்டதாக இருக்கும் என்றும், பலமுறை மிகவும் குறைவான ஆடைகள் அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“இது ஏன் இவ்வளவு சிறிய உடை?” என்று கேட்டால், “இயக்குநர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். பாடலுக்கு இது தான் பொருத்தமாக இருக்கும்” என்று பதில் கூறுவார்கள் என மும்தாஜ் தெரிவித்தார். ஒரு நடிகையாக இயக்குநரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை தான் உண்மையான ஒடுக்குமுறை என்று அவர் வேதனையுடன் கூறினார்.

மேலும் தற்போது தாம் ‘அபாயா’ அணிந்து வெளியே செல்லும் வாழ்க்கையை தேர்வு செய்திருப்பதாகவும், முன்பு கவர்ச்சி உடையில் இருந்தபோது ஆண்கள் பார்த்த விதத்திற்கும், இப்போது அபாயா அணிந்திருக்கும் போது கிடைக்கும் பார்வைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை உணர முடிகிறது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here