கோலாலம்பூர்:
கிளாந்தான், பாசிர் பூத்தே மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், போக்குவரத்துப் போலீசாருக்குச் சொந்தமான நான்கு மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
அதிகாலை மணி 2.27 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அங்கிருந்த ஒரு தனிநபரின் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையானதோடு, போலீஸ் தலைமையகக் கட்டிடத்தின் ஒரு பகுதியும் லேசான சேதத்திற்கு உள்ளானது.
இத்தீவிபத்து குறித்துத் தகவல் கிடைக்கப்பெற்று விரைந்து வந்த பாசிர் பூத்தே தீயணைப்பு, மீட்பு நிலையத்தினர், சுமார் ஒரு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அதிகாலை மணி 3.40 அளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக நிலையத் தலைவர் அஸ்ஹார் எல்மி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எஞ்சின் மற்றும் எரிபொருள் கசிவு காரணமாகத் தீ வேகமாகப் பரவியிருக்கலாம் எனக் கருதப்படும் வேளையில், இந்த விபத்திற்கான உண்மையான பின்னணி மற்றும் சேத மதிப்பு குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










