RSN ராயருக்கு அவதூறு ஏற்படுத்திய வழக்கு: சமூக ஊடகங்களில் வீடியோ பரப்பிய நபருக்கு RM100,000 அபராதம்!

கோலாலம்பூர்:

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறவாரியத்தின் (PHEB) தலைவருமான ஆர்.எஸ்.என். ராயர் (RSN Rayer) தொடர்ந்த அவதூறு வழக்கில், சமூக ஊடகப் பயனர் ஒருவருக்கு 100,000 ரிங்கிட் இழப்பீடு மற்றும் 4,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையை வழங்குமாறு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தொடர் அவதூறு வீடியோக்கள் தொடர்பாக, பிரதிவாதியான எஸ்.முருகேசன் (வயது 50) என்பவருக்கு எதிராக நீதிபதி நோர்சல்ஹா ஹம்ஸா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த அவதூறு சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு பண விவகாரம் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோக்கள் வெளியாவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, பிரதிவாதியான முருகேசன் நாடாளுமன்ற உறுப்பினர் ராயரிடம் 30,000 ரிங்கிட் கடன் கேட்டுள்ளார். ஆனால், ராயர் அந்தக் கடனைத் தர மறுத்ததால் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் மற்றும் ஆத்திரத்தின் காரணமாகவே, முருகேசன் சமூக ஊடகங்களில் ராயருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளைப் பரப்பியது தெரியவந்துள்ளது.

வழக்கறிஞரான கே.குமரதிரவியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ராயரின் புகாரறிக்கையின் படி, பினாங்கு இந்து அறவாரியத் (PHEB) தலைவராக இருக்கும் ராயர், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்றும், ஊழல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்றும் வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டது.

அறவாரியத்திற்குச் சொந்தமான நிதியை ராயர் திருடினார் அல்லது முறைகேடாகப் பயன்படுத்தத் திட்டமிட்டார் போன்ற கடுமையான பொய்ப் புகார்களை முருகேசன் பரப்பியுள்ளார்.

மேலும், ராயரின் நேர்மை, தகுதி மற்றும் நற்பண்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மிக இழிவான மற்றும் ஆபாசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு, கருத்துகள் எழுதப்பட்டதால், ஒரு மக்கள் பிரதிநிதியாகவும், வழக்கறிஞராகவும், ஜசெக (DAP) தலைவராகவும் இருக்கும் ராயரின் நற்பெயருக்குச் சமுதாயத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இந்த அவதூறு தொடர்பாகக் கடந்த 2024 நவம்பர் 19 அன்று ஆர்.எஸ்.என். ராயர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக் கோரியும் அவதூறு வீடியோக்களைத் திரும்பப் பெறக் கோரியும் முருகேசனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அத்துடன் நவம்பர் 24 அன்று போலீசிலும் புகார் அளித்தார்.

இருப்பினும், முருகேசன் மன்னிப்புக் கேட்க மறுத்ததோடு, அதற்குப் பதிலாகக் கெலுகோரில் (Gelugor) உள்ள ஒரு கோயில் திருவிழா நிகழ்வின் போது ராயர் தான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர் நிபந்தனை விதித்து நவம்பர் 25-இல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலில் ராயர் தரப்பில் 500,000 ரிங்கிட் வரை பொது மற்றும் முன்மாதிரி இழப்பீடுகள் கோரப்பட்டிருந்தன. வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இருப்பதை உறுதி செய்து, முருகேசனுக்கு 100,000 ரிங்கிட் இழப்பீடும், 4,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

மேலும், ராயருக்கு எதிராக இனிமேல் எந்தவொரு அவதூறு கருத்துகளையும் முருகேசன் வெளியிடக் கூடாது எனத் தடை விதித்த நீதிமன்றம், அவர் தனது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகப் பகிரங்க மன்னிப்புக் கடிதத்தை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here