அனுகெரா செரி அங்காசா 2026 விருது வழங்கும் விழாவில், கடந்த 2022-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட ‘சிறந்த வானொலி வர்ணனையாளர்’ எனும் விருதுப் பிரிவு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ சிங் தெரிவித்தார். கோலாலம்பூரில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருதுக்கான பரிந்துரை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், ஒளிபரப்புத் துறையினர், போட்டித் தேர்வுக்குழுவின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்ட தாகக் குறிப்பிட்டார். விளையாட்டு வர்ணனை என்பது தனித்திறமை, நிபுணத்துவம் தேவைப் படும் சவாலான பணி என்பதால் அதற்கு அங்கீகாரம் அளிப்பது அவசியமான ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
மேலும், விருதுப் பிரிவுகளில் செய்யப்பட் டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கிய தியோ நீ சிங், ஏற்கெனவே இருந்த ‘சிறந்த நாடகத் தொடர்’ எனும் பிரிவு நீக்கப்பட்டு, அதற்குப்பதிலாக ‘சிறந்த நாடகம்/ நாடகத் தொடர்/குறு நாடகம்’ எனப் பிரிவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் ‘சிறந்த காணொலி உள்ளடக்கம்’ என்பது ‘சிறந்த குறுங்காணொலி’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மொத்தம் 40 தொலைக்காட்சிப் பிரிவுகள், 17 வானொலிப்
120 பிரிவுகள், 3 புதிய ஊடகப் பிரிவுகள் என 60 பொதுப் பிரிவுகளும் நீதிபதிகளின் சிறப்பு விருது, ‘தொக்கோ செரி அங்காசா’ ஆகிய இரண்டு சிறப்பு விருதுகளும் சேர்த்து மொத்தம் 62 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலம் வரும் ஜூன் 4 முதல் ஜூன் 22 வரை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான படைப்புகளை உரிமம் பெற்ற ஒளிபரப்பு நிறுவனங்கள் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
2024 ஜனவரி 1 முதல் 2025 டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் முதல்முறை ஒளிபரப்பப்பட்ட படைப்புகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, வரும் 2026 அக்டோபர் 24ஆம் தேதி புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.










