அமெரிக்கா காகித ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்

வாஷிங்டன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த வேலைக்காக, பெரிய ரசாயன தொட்டியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கேலன்கள் கொண்ட கலவை தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த தொட்டி திடீரென வெடித்துள்ளது. அதில், இருந்த ரசாயன கலவை வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதில், காகிதங்களை எடுத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிறிய ரக லாரிகள் கவிழ்ந்தன. ஆலையின் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டது. இந்த தீங்கு ஏற்படுத்தும் ரசாயன திரவம் பரவியதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை வரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதனால், 9 பேர் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்ற 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. எனினும், 11 பேர் பலியாகி இருக்க கூடும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. தொட்டியில் இருந்து வெளியேறிய ரசாயனம் அதிக நச்சு தன்மை கொண்டது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அதனால் பரவ கூடிய வாயுவை சுவாசிப்பதும் கூட பலத்த சுவாச பாதிப்புகளையும், காயங்களையும் ஏற்படுத்தும். இந்த சம்பவத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, அந்த காகித நிறுவனம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here