குவாரி குட்டையில் குளித்த இரண்டு பதின்ம வயது சிறுமிகள் நீரில் மூழ்கி பலி!

கோலாலம்பூர்:

சபாவின் சண்டாக்கான், கம்போங் கும்-கும் (Kampung Gum-Gum) பகுதியில் உள்ள குவாரி குட்டை ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பதின்ம வயது (Teenage) சிறுமிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுமிகள் நூர்ஃபாதின் (15) மற்றும் நூர்டினா நிர்மலா (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று மாலை 5 மணி அளவில் அந்த குவாரி குட்டையில் குளித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

தீயணைப்புப் படைக்கு மாலை 5:33 மணிக்கு தகவல் கிடைத்தது என்றும், மீட்புக் குழுவினர் மாலை 5:59 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும் சண்டாக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜிம்மி லாகுங் கூறினார்.

தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, முதலாம் சிறுமியைப் பொதுமக்கள் மீட்டுவிட்டனர், அத்தோடு இரண்டாவது சிறுமியைத் தீயணைப்புப் படையினர் பொதுமக்களின் உதவியோடு மீட்டனர்.

மீட்கப்பட்ட இரு சிறுமிகளையும் பரிசோதித்த மலேசிய சுகாதார அமைச்சின் (MOH) மருத்துவப் பணியாளர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்நிலைகளில் குளிக்கும்போது பொதுமக்கள், குறிப்பாகப் பிள்ளைகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here