பூச்சோங் LDP நெடுஞ்சாலையில் ‘தவறான திசையில்’ பயணம்: இரு கார்கள் மீது மோதிய ஹோண்டா சிட்டி ஓட்டுநருக்குப் பலத்த காயம்!

கோலாலம்பூர்:

சிலாங்கூர், டாமன்சாரா-பூச்சோங் அதிவேக நெடுஞ்சாலையில் (LDP) நேற்று சன்வேயிலிருந்து பூச்சோங் நோக்கிச் செல்லும் பாதையில், கார் ஒன்று எதிர்த் திசையில் (Wrong Way) அசுர வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான திகிலூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்த் திசையில் ஆபத்தான முறையில் நுழைந்த ‘ஹோண்டா சிட்டி’ (Honda City) ரகக் கார், தனது பாதையில் முறையாக வந்துகொண்டிருந்த ‘பெரோடுவா ஆக்சியா’ (Perodua Axia) மற்றும் ‘ஹோண்டா சிஆர்-வி’ (Honda CR-V) ஆகிய இரு கார்களின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தத் துணிகர சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாகச் செர்டாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் முகமட் ஃபாரிட் அகமட் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தின்போது அவர் மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதைக் கண்டறிய, அவரின் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர மோதலில் சிக்கிய மற்ற இரு கார்களின் ஓட்டுநர்களும் அதிர்ஷ்டவசமாக எவ்விதப் பலத்த காயமுமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42(1)இன் (ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுதல்) கீழ் செர்டாங் மாவட்டக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here