கோலாலம்பூர்:
மலேசிய சட்டத்துறையின் மூத்த மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான டான்ஸ்ரீ வி. ஜெயரத்தினம், இன்று காலை அவரது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் இயற்கை காரணங்களால் காலமானார். மறைந்த டான்ஸ்ரீ வி. ஜெயரத்தினத்திற்கு வயது 101 ஆகும்.
முன்னாள் பேராக் மாநில போலீஸ் தலைவரும், தற்போது வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவருமான டத்தோ மியோர் ஃபரிதலாத்ராஷ் வாஹிட் இந்தத் துயரச் செய்தியை ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மறைந்த டான்ஸ்ரீ வி. ஜெயரத்தினத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு (Wake) நாளை (ஜூன் 5) இப்போவில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் (Church of St Michael) நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்குகள் வரும் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1925-ஆம் ஆண்டு பிறந்த டான்ஸ்ரீ வி. ஜெயரத்தினம், மலேசிய சட்டத்துறையின் (Malaysian Bar) ஒரு முக்கியத் தூணாகக் கருதப்பட்டவர். பல்வேறு தொழில்முறை மற்றும் சமூக நல அமைப்புகளில் மிக உயரிய பொறுப்புகளை வகித்துள்ள அவர், மலேசிய சிவில் சமூகத்தின் ஆளுமையாகவும் மதிக்கப்பட்டார்.
டான்ஸ்ரீ வி. ஜெயரத்தினத்திற்கு ஜெயராஜா, ஜெயமலர், ரத்தினமலர் ஆகிய பிள்ளைகளும், சங்கர், ஜெயந்தி ஆகிய இரு பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவரது அன்பு மனைவியான பூவான்ஸ்ரீ டாக்டர் ராஜமலர் ஜெயரத்தினம், கடந்த 2008-ஆம் ஆண்டில் தனது 78-ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு மலேசிய சட்டத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.




















