தொழிலாளர் கல்வி நிலையத்திற்கு பிரத்யோக இணையதளம் உருவாக்கம்

சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 1988-லிருந்து சங்கமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் இக்கல்வி நிலைய ஆட்சிமன்றக் குழுவின் தலைவராவார். இக்கல்வி நிலையத்தின் நிர்வாக செலவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் மானியம் அளித்து வருகிறது.

இக்கல்வி நிலையம் தொழிலாளர் மேலாண்மையில் பி.ஏ. (இளங்கலை பட்டப்படிப்பு) மற்றும் எம்.ஏ (முதுகலை பட்டப்படிப்பு) ஆகியவற்றை நடத்தி வருகிறது. 2001 முதல் முழுநேர மற்றும் பகுதி நேர ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்பு நடத்துவதற்கு சென்னைப் பல்கலைக் கழகம் ஓர் ஆராய்ச்சி நிலையமாக இக்கல்வி நிலையத்தை அங்கீகரித்துள்ளது.

இக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் படிப்புகள், பயிற்சி வகுப்புகள், ஆராய்ச்சி செயல்பாடுகள், சேர்க்கை தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் பிற கல்வி நிலைய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை மாணவர்கள் மற்றம் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தின் செயல்பாடுகளை விரிவாக வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கி இந்த இணையதளம் (https://tils.tn.gov.in/) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அரசு செயலாளர் கொ. வீர ராகவ ராவ், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் / கூடுதல் தொழிலாளர் ஆணையர் கோ.சசிகலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here