சமூக ஒற்றுமையை குலைக்கும் வைரல் பதிவு – பெர்மிம் கண்டனம்

    சமூக வலைத்தளங்களில் சமீபமாக பரவலாக பரப்பப்பட்டுள்ள ஒரு மோசமான மற்றும் பொறுப்பற்ற பதிவு மலேசியாவில் உள்ள பல்வேறு இன, மத மக்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நேற்று இஸ்லாமியரிகளின் புனித இடமான மக்காவை குறிவைத்து மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய கருத்துகளைக் கொண்டதாகவும் கூறப்படும் இந்த பதிவு, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதிக்கக்கூடியதாக பார்ப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

    மலேசியா என்பது பல இன, பல மத மக்களால் அமைதியாகவும், ஒற்றுமையுடனும் வாழும் நாடாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்நிலையில், இவ்வாறான பொறுப்பற்ற மற்றும் தீவிரமான கருத்துக்கள் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் அபாயம் அதிகம் உள்ளது. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சகோதரத்துவ உணர்வை இவ்வாறான பதிவு போன்றவை பாதிக்கும் என்ற கவலை நிலவுகிறது.

    *மலேசியா இந்திய முஸ்லீம் தேசியப்பேரவை பெர்மிம் மலேசியாவில் சங்கங்களின் பதிவு இலாக்காவில் பதியப்பட்ட அரசுசாரா அமைப்புகளின் தாய் சபை இப்பதிவை மிகக் கடுமையாக கண்டித்துள்ளது*. இவ்வாறான கருத்துக்கள் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. மலேசியர்களாக நாம் அனைவரும் பரஸ்பர மரியாதை, சமநிலை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியது கடமை. சிலரின் பொறுப்பற்ற பேச்சு, இந்த நல்ல உறவுகளை சேதப்படுத்தும் அபாயம் கொண்டது, என்று பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷா தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி மத வெறி அல்லது அச்சம் ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவது சட்டரீதியாகவும் தவறானது. இந்த சம்பவத்தை போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது சம்பந்தமாக போலீசிலும் உரிய முறையில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று அஸ்மான் ஷா கூறினார். ஆட்சியாளர்களை சமூக ஊடகங்களில் அவமதிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை இல்லை என்றும் கூறினார். இத்தகைய செயல்கள் நாட்டின் அமைதி, மக்கள் ஒற்றுமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவாது என்றும், மாறாக பிரிவினையை உருவாக்கும் என்றும் பெர்மிம் வலியுறுத்தியுள்ளது.

    மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், பிறரின் மத உணர்வுகளை மதித்து நடப்பது அவசியம் என்றும், இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவாறு கடுமையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் பெர்மிம் வலியுறுத்தியுள்ளது. 1973 ஆண்டு உருவாக்கப்பட்ட பெர்மிம், கடந்த 53 வருடங்களாக சமுதாய மற்றும் சமூக பிரச்சனையில் இந்திய முஸ்லீம் தாய் சபையாக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அந்த அக்கறை மேலும் தொடரும் என்று பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷா தெரிவித்தார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here