இந்திய சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா அமைப்பு தங்களின் இரண்டு முக்கிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களைத் தொடங்கியுள்ளது. ஆரோக்கியா மடானி 2026 டயாலிசிஸ் உதவித் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு ஐந்தாயிரம் ரிங்கிட் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. பி40 மற்றும் எம்40 வருமானக் குழுவைச் சேர்ந்த இந்தியர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டத்தில், பி40 குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மொத்தம் 1,300 பேர் பயனடையும் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 4, 2026 அன்று மூடப்படும். இதற்கிணையாக, 2026-ஆம் ஆண்டிற்கான கல்வி மடானி – கல்வி உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வுகளுக்குத் தயாராகும் 5,000 இந்திய பி40 மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி மடானி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 19, 2026 அன்று மூடப்படும்.
மேற்கண்ட இரண்டு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தகுடியுடையவர்கள், மித்ராவின் www.mitra.gov.my எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களையும் வழிகாட்டுதல்களையும் அணுகலாம். மேலும், இந்தத் திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு மித்ராவின் முகநூல் (MITRA Kesuma)) பக்கத்தைப் பார்வையிடவும்.

ஆரோக்கியா மடானி திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 03-8886 6239 அல்லது 6221 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். கல்வி மடானி திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு 03-8886 6192 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இந்த இரண்டு திட்டங்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் முறையே இங்கு இணைக்கப்பட்டுள்ள உள்ள சுவரொட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. மலேசிய இந்தியர் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மே 29-ஆம் தேதி மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த புதிய முன்னெடுப்புகளை அறிவித்தார்.

மித்ரா அமைப்பின் கீழ் ஆறு புதிய முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதற்காக மடானி அரசாங்கம் 65.6 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். கல்வி, தொழில்முனைவோர், சுகாதாரம், சமூக நலன் மற்றும் சமூகம் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தினர் அனைவரும் முழுமையான பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று கூறிய அவர், செலிக் மடானி, கல்வி மடானி, உயர்வு மடானி, ஆரோக்கியா மடானி, துணை மடானி மற்றும் மடானி மக்கள் இந்திய சமூகத் திட்டம் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும் என்றும் விளக்கினார். பிற திட்டங்களுக்கான விண்ணப்ப அறிவிப்புகள் வரும் காலங்களில் கட்டம் கட்டமாகத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.









