DBKL லஞ்சக் குற்றச்சாட்டை மறுப்பு: வியாபாரியிடம் சோளம் மட்டுமே திருப்பித் தரப்பட்டதாக விளக்கம்!

கோலாலம்பூர்:

வெளிநாட்டு நடைபாதை வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கோலாலம்பூர் நகராண்மை கழக (DBKL) அதிகாரிகள் திருப்பி அளித்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை DBKL திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தக் கூற்றுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ள கோலாலம்பூர் நகராண்மை கழகம், இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
“மாநகராட்சி அதிகாரிகள் மீதான இந்த லஞ்சக் குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். DBKL இன் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற பொய்த் தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் ஜாலான் புக்கிட் பிந்தாங் (Jalan Bukit Bintang) பகுதியில் உரிமம் இன்றி சுட்ட சோளம் விற்றுக்கொண்டிருந்த உள்ளூர் வியாபாரி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்த சர்ச்சை எழுந்தது.

2016-ஆம் ஆண்டு நடைபாதை வியாபாரிகள் உரிம விதிமுறைகளின் கீழ், அந்த வியாபாரியின் ஒரு எரிவாயு உருளை (Gas cylinder) மற்றும் தள்ளுவண்டி ஆகியவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

சமூக ஊடக வீடியோவில் அதிகாரிகளால் அந்த வியாபாரியிடம் ஒரு வெள்ளை நிற தெர்மாகோல் பெட்டி (Polystyrene box) திருப்பித் தரப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது குறித்து விளக்கமளித்த DBKL, அந்தப் பெட்டிக்குள் எளிதில் அழுகிப்போகக்கூடிய பச்சச்சோளம் இருந்ததால், வியாபாரியின் தொடர் கோரிக்கையை ஏற்று அது மட்டும் அவரிடம் திருப்பித் தரப்பட்டதாகக் கூறியுள்ளது.

வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே அந்தப் பெட்டி ஒப்படைக்கப்பட்டதாகவும், எனினும் அவரின் மற்ற முக்கியப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாநகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அதே நாளில் அப்பகுதியில் சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராக மேலும் 5 பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 4 அபராதங்களும் (Compounds) விதிக்கப்பட்டதாக DBKL தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here