சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னருக்கு சபாநாயகர் அழைப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல் அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வருகிற 18ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ளது. விஜய் முதல் அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், இந்த கூட்டத்தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இதற்காக கவர்னர் அர்லேகரை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், நேரில் அழைப்பு விடுத்தார். கூட்டத்தொடரின் முதல் நாளான 18ஆம் தேதி கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார்.

முக்கிய அறிவிப்புகள் இருக்குமா?

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், மின்வெட்டு பிரச்சினை, தமிழக வெற்றிக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல் அமைச்சர் விஜய் இந்த கூட்டத்தொடரில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய தி.மு.க. ஆட்சியின் கடைசி கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனவே, வரவிருக்கும் கூட்டத்தொடரில் முழுமையான பட்ஜெட்டை தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்ய உள்ளது. மேலும், தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here