அகதிகள் மீதான கண்காணிப்பு தீவிரம்: மலேசியாவில் 33,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது!

கோலாலம்பூர்:

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையத்தின் (UNHCR) அடையாள அட்டையை வைத்திருப்பது, மலேசியச் சட்டங்களிலிருந்து தப்பிப்பதற்கான சலுகை அல்ல என்று குடிநுழைவுத் துறை (JIM) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் கூறுகையில், “முறையான குடிவரவு ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக UNHCR அட்டைதாரர்கள் தடுத்து வைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது நாட்டின் இதர சட்டங்களை மீறினாலோ, அவர்களுக்கு எதிராக சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

மேலும், மலேசியாவில் தங்கியுள்ள அகதிகளின் துல்லியமான எண்ணிக்கையை அறிய UNHCR தரவுகளை மட்டும் நம்பியிருக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும், அகதிகள் அனைவரையும் முழுமையாகப் பதிவு செய்யும் சிறப்பு நடவடிக்கையை உள்துறை அமைச்சு தற்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

UNHCR தரவுகளின்படி, மலேசியாவில் 140 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் ஆவர்.

மலேசியாவில் குடிநுழைவுச்சட்டங்களை மீறுவோருக்கு எதிரான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டின் ஜூன் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 5,430 அமலாக்க நடவடிக்கைகளில், 33,145 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வருகைப் பாஸ்களை (Social Visit Pass) தவறாகப் பயன்படுத்தி வேலை செய்தல் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இவர்களின் கைதுக்கு முக்கியக் காரணமாகும்.

அதேவேளையில், சட்டபூர்வ அனுமதியின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக 868 முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 95 சதவீதம் பேர் உள்ளூர் முதலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படாது. நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது,” என டத்தோ ஜக்காரியா ஷாபான் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குடிவரவு தடுப்பு முகாம்களில் 22,151 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here