18 கட்சிகள் கொண்ட அரசில் ஒற்றுமையைக் காப்பது சவால்; ஊடகங்கள் மிக முக்கிய பலம்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ்

மலேசியாவின் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் 18 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் சூழலில், சமுதாயத்தில் எவ்வித கருத்து வேறுபாடுகளோ அல்லது இணக்கமற்ற தன்மையோ ஏற்படாமல் ஒற்றுமையைப் பேணிக் காப்பது பெரும் சவாலாகும் என்றும், இத்தகைய சவால்களை எதிர்கொள்வதில் ஊடகங்கள் அரசுக்கு மிக முக்கியத் துணையாகவும் பாலமாகவும் இருக்கின்றன என்றும் தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

“நான் பொருப்பேற்ற கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் பலதரப்பட்ட செய்திகளையும் பயனுள்ள தகவல்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் மிகச் சிறந்த பங்காற்றியுள்ளன. சமுதாயத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த ஊடகங்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது” என்றார் அவர்.

மேலும், தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்படும் ‘கூட்டுப்பணி, கொள்கை பிரிவு’ போன்ற துறைகளுடன் இணைந்து ஊடகங்கள் இன்னும் அதிகமான கூட்டுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

​தி வெஸ்டின் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தேசிய ஒற்றுமை அமைச்சு என்பது கட்டமைப்பில் சிறியதாக இருந்தாலும் அதன் கீழ் தேசிய ஆவணக்காப்பகம், அருங்காட்சியகத் துறை, தேசிய நூலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத் துறை ஆகிய நான்கு முக்கியத் துறைகளும், மாணவர் தன்னார்வலர் அறக்கட்டளை உள்ளிட்ட மூன்று முக்கிய வாரியங்களும் இயங்கி வருவதாக விளக்கினார்.

​நாட்டின் ஒற்றுமை என்பது ஒரே நாளில் எட்டக்கூடியது அல்ல; அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு நெடிய பயணம் என்று குறிப்பிட்ட அவர், இளைய தலைமுறையினரிடையே நாட்டின் ஐம்பெரும் கோட்பாடுகளை ஆழமாக விதைப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். அண்மையில் பிரதமர் சபா மாநிலத்திற்கு வருகை தந்திருந்தபோது, பள்ளிகளில் ‘தேசியக் கோட்பாட்டுக் கழகங்களை’ வலுப்படுத்துவதற்காக ஐந்து மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருந்ததையும் துணை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

இறுதியாக, சமுதாயத்திற்காகத் தங்களின் செய்திப் பணிகளைத் தீவிரம் குறையாமல் அர்ப்பணிப்போடு வழங்கி வரும் ஊடகவியலாளர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here