பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை- போலீஸ்

நெகிரி செம்பிலான்:

பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில், எந்தவிதமான குற்றவியல் பின்னணியோ அல்லது பகடிவதையோ (Bullying) நடக்கவில்லை என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த அவர், பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே மாணவி உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சோகமான மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உயிரிழந்த மாணவியின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் உட்பட 10 முதல் 15 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் இது குறித்துத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று டத்தோ அல்சாஃப்னி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் உணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here