இனி சகித்துக் கொள்ள முடியாது” – வங்காளதேசத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கப் பிரதமர் அன்வார் உறுதி!

புத்ராஜெயா:

மலேசியாவிற்கு வருகை தந்துள்ள வங்காளதேச தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதோடு, அவர்கள் எவ்விதத்திலும் சுரண்டப்படுவதை மலேசிய அரசு இனி ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பொருளாதாரப் உயிர்நாடிக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர், கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ தங்களின் சுயலாபத்திற்காகத் தொழிலாளர்களைத் தவறாக நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.

இன்று புத்ராஜெயாவில் வங்காளதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் (Tarique Rahman) நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் அன்வார் இப்ராகிம் இதனை தெரிவித்தார்.

“இரு நாடுகளுக்கு இடையிலான மனிதவள ஒத்துழைப்பு, குறிப்பாகத் தொழிலாளர்களின் பங்களிப்பு நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. ஆனால், அதே வேளையில் இது பல சர்ச்சைகளையும், மனிதநேயம் சார்ந்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தொழிலாளர்களை நடத்தும் விதம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை பெரும் சவாலாக உள்ளன.

நமக்குத் தொழிலாளர்கள் தேவை என்பது உண்மைதான். ஆனால், அதைவிட முக்கியம் அவர்களின் நலன்களையும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும். தனிநபர் மற்றும் நிறுவனங்களின் லாபத்திற்காகத் தொழிலாளர்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதையும், மோசமாக நடத்தப்படுவதையும் இனி அனுமதிக்கவே முடியாது.”

மேலும், இரு நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் மிகவும் நியாயமான மற்றும் வெளிப்படையான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முறையை (Recruitment System) உருவாக்குவதில் மலேசியா முன்னின்று செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய வங்காளதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான், மலேசியா தங்களின் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும், தங்களுக்கான தொழிலாளர் சந்தையைச் (Labour Market) சாத்தியமான தவர்த்தில் விரைவாகத் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும், அதே வேளையில் தொழிலாளர்களுக்குக் குறைந்த செலவினங்களைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கான செலவைக் குறைக்க முடியும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், மலேசியாவில் முறையான ஆவணங்களின்றி இருக்கும் வங்காளதேசத் தொழிலாளர்களை முறைப்படுத்துவது (Regularisation) மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களைத் தாயகம் திருப்புவது குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக வங்காளதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here