ம.இ.கா. தைப்பிங் தொகுதித் தலைவர் எம். வீரன், தைப்பிங் மாநகர மன்ற உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டு நேற்று தனது பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். பேராக் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ம.இ.கா. பிரதிநிதிகளை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை 9 மணியளவில் தைப்பிங் மாநகர மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தைப்பிங் மாநகர மன்றத் தலைவர் முகமது அக்மல் பின் டஹாலான் முன்னிலையில் எம். வீரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மீண்டும் இந்தப் பொறுப்பை வகிக்க வாய்ப்பு வழங்கிய ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிக் கூறினார். இந்த நியமனம் மூலம் தைப்பிங் மக்களின் தேவைகள், பிரச்சினைகளுக்கு மேலும் திறம்பட சேவை செய்ய உறுதியுடன் செயல்படுவதாகவும் எம்.வீரன் தெரிவித்தார்.
எஸ்.லிங்கேஸ்வரன்










