சொந்தத் தங்கையைக் கற்பழித்த கொடூரம்: ஹார்ட்வேர் கடை ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்:

தனது 16 வயது சொந்தத் தங்கையைக் கற்பழித்ததோடு, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது ஹார்ட்வேர் கடை ஊழியர் ஒருவர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

நீதிபதி முகமது சுல் ஜகிகுடின் சுல்கிஃப்லி முன்னிலையில் இவ்விரு குற்றச்சாட்டுகளும் வாசித்துக் காட்டப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவரின் சொந்தத் தங்கை என்பதால், சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அவருக்குப் பிணை (Bail) வழங்க அரசுத் தரப்பு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டது.

முதல் குற்றச்சாட்டில், கடந்த ஜனவரி மாதம் இரவு 11:00 மணியளவில், கம்போங் தித்தியான் பாருவில் உள்ள ஒரு வீட்டில் தனது தங்கையைக் கற்பழித்ததாக அவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றம் தண்டனைச் சட்டம் பிரிவு 376(3)-இன் கீழ் (நெருங்கிய உறவினருக்குள் நடக்கும் கற்பழிப்பு / Incestuous Rape) பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 10 பிரம்படிகளும் விதிக்கப்படச் சட்டத்தில் இடமுண்டு.

மேலும் கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு 9:00 மணியளவில் அதே இடத்தில், தனது தங்கைக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் (Physical Sexual Assault) கொடுத்ததாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. சொந்தத் தங்கை என்பதால், நம்பிக்கைத் துரோகம் இழைத்ததற்கான பிரிவும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் மீது 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(d) மற்றும் பிரிவு 16(1)-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் 2 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

இவ்வழக்கின் அடுத்தகட்டப் பரிசீலனைக்காக (Mention) வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதியை நீதிமன்றம் குறித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here