புக்கிட் பெசி பள்ளியின் அறிவியல் கூடத்தில் பாதரசம் கொட்டியதால் மாணவி காயம்.

கோலாலம்பூர்:

திரெங்கானு, டுங்குன் மாவட்டத்தில் உள்ள புக்கிட் பெசி தேசிய இடைநிலைப்பள்ளியின் அறிவியல் கூடத்தில் தெர்மோமீட்டர் உடைந்து அதில் உள்ள பாதரசம் கொட்டியதில் படிவம் நான்கு மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று மதியம் 1.34 மணியளவில் இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதாக அல் முக்தாஃபி பில்லா ஷா தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி காமா சுஹைமி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அறிவியல் கூட மேஜையின் மீது தெர்மாமீட்டர் தவறி விழுந்து உடைந்ததால், சுமார் பூஜ்ஜியம் புள்ளி ஆறு சதுர மீட்டர் பரப்பளவிற்குப் பாதரசம் பரவியதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக, ரசாயனப் பாதிப்பைக் குறைப்பதற்காகப் பள்ளி நிர்வாகம் கந்தகத் தூளைத் தூவி முதற்கட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த ஆறு தீயணைப்பு வீரர்கள், அபாயகரமான ரசாயனங்களைக் கையாளும் சிறப்பு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பாதரசக் கழிவுகளை முழுமையாக அகற்றிப் பைகளில் சேகரித்துப் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, பாதரச துகள்கள் பட்டதால் காயமடைந்த அந்த மாணவி சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளினிக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here