மச்சாங்கில் வழிகாட்டி செயலியை நம்பிச் சென்று பள்ளத்தில் பாய்ந்த கார்; 5 சீன நாட்டவர்கள் காயம்!

கோத்தா பாரு:

கிளாந்தான், மச்சாங் அருகே நேற்று நள்ளிரவில் வழிகாட்டி செயலி (Navigation App) காட்டிய பாதையைப் பின்தொடர்ந்து சென்ற கார் ஒன்று, கட்டுமானப் பகுதியில் இருந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சீன நாட்டைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.

ஜாலான் கோத்தா பாரு-கோலா கிராய் (Jalan Kota Bharu-Kuala Krai) வழித்தடத்தின் 41-ஆவது கிலோமீட்டரில் உள்ள மதகு (Culvert) கட்டுமானப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது குறித்து நள்ளிரவு 12:01 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் அசுஹார் முகமது நோர் தெரிவித்தார்.

நேற்று இரவு சுமார் 11:50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 66 வயதுடைய சீன நாட்டு ஆடவர் ஓட்டி வந்த ‘டொயோட்டா பிரியஸ்’ (Toyota Prius) ரக காரில், மேலும் 4 சீன நாட்டவர்கள் பயணிகளாக இருந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் மச்சாங், தெமங்கானில் (Temangan) இருந்து பாசிர் பூத்தே, தோக் பாலி (Tok Bali) நோக்கிச் செல்வதற்குத் தங்களின் மொபைல் போனில் உள்ள வழிகாட்டி செயலியைப் பயன்படுத்தியுள்ளனர். அப்போது, இன்னும் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத மதகு பகுதிக்குள் கார் நுழைந்து, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பள்ளத்திற்குள் தலைகீழாகப் பாய்ந்தது.

இவ்விபத்தில் சிக்கிய 40 முதல் 66 வயதுக்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக மச்சாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று, மச்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி முகமட் ஃபட்சில் மூசா கூறினார்.

இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

“வாகன ஓட்டிகள் அனைவரும், குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது கட்டுமானப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகள், கூம்புகள் (Traffic Cones) மற்றும் தடுப்புகளைக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, வழிசெலுத்தல் செயலிகளை (GPS) மட்டுமே முழுமையாக நம்பி பயணிக்க வேண்டாம்,” என மாவட்ட காவல்துறைத் தலைவர் அசுஹார் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here