கோலாலம்பூர்:
செராஸ், ஜாலான் குவாரியில் (Jalan Kuari, Cheras) உள்ள முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கான மயான வளாகத்தை (Crematorium Complex) மேம்படுத்துவதற்காக 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மாபெரும் திட்டத்தை கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) அறிவித்துள்ளது.
முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கான இறுதிச்சடங்கு சேவைகளை மேம்படுத்தவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ’13-ஆவது மலேசியத் திட்டத்தின்’ கீழ் 2026-ஆம் ஆண்டிற்கான முதலாவது திட்டமாக இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
1977-இல் கட்டப்பட்ட இந்த மயான வளாகம் மலேசியாவின் மிகப்பெரிய பொது மயானங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுக்கு சராசரியாக 5,844 உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. தற்போதுள்ள 7 தகன உலைகளின் (Cremators) எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 18 ஆக இருக்கும் தகனக் கொள்ளளவு 27 ஆக அதிகரிக்கும்.
தற்போது ஆரம்பக்கட்டப் பணிகளில் இருக்கும் இத்திட்டம், வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்காக நவீனமயமாக்கப்பட்ட காத்திருப்பு அறைகள் மற்றும் இதர ஆதரவு வசதிகள் இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலக்கட்டத்தில் பொதுமக்கள் எவ்வித இடையூறுகளும் இன்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்ய, 4 தற்காலிக தகன மேடைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று, கோலாலம்பூர் மேயர் (Mayor) டத்தோஸ்ரீ ஃபத்லுன் மாக் உஜுத் கூறினார்.
ஒரு திட்டத்தின் உண்மையான வெற்றி அதன் செலவில் இல்லை, மாறாக பொதுமக்கள் அனுபவிக்கும் சேவையின் தரத்திலும் அவர்கள் உணரும் நிஜமான மாற்றத்திலுமே உள்ளது என்றார். தலைநகரின் தேவைகளுக்கு ஏற்ப கோலாலம்பூர் நகராண்மை கழகத்தின் (DBKL) பொதுச் சேவைத் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.



















