‘காந்தாரா’ ரசிகர்களுக்கு குட் நியூஸ்… அடுத்த பாகம் குறித்து ரிஷப் ஷெட்டி தகவல் …

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் 2022-ஆம் ஆண்டு வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடகாவின் பாரம்பரிய கலாசாரம், தெய்வ வழிபாடு மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், மொழி எல்லைகளைக் கடந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிஷப் ஷெட்டியுடன் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரூ.800 கோடிக்கும் மேல் வசூல்… 50 நாட்கள் வெற்றிநடை

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். பழங்குடியினர், மன்னர் வம்சம், நாட்டுப்புற தெய்வங்கள் மற்றும் தொன்மங்களை மையமாகக் கொண்ட கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

‘காந்தாரா: சாப்டர் 2’ கதையை உருவாக்கி வருகிறேன்

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘காந்தாரா: சாப்டர் 2’ குறித்து ரிஷப் ஷெட்டி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், “நடிகராக தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், இயக்கத்தை நான் ஒருபோதும் கைவிடவில்லை. இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமான ‘காந்தாரா’ பிரான்சைஸின் அடுத்த பாகமான ‘காந்தாரா: சாப்டர் 2’-க்கான கதைக்களத்தை உருவாக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.

இயக்குநராக பணியாற்றும்போதுதான் எனக்கு உண்மையான மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. எனது எழுத்தாளர்கள் குழுவுடன் இணைந்து படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.

கைவசம் பிரம்மாண்ட படங்கள்

இதற்கிடையில், ரிஷப் ஷெட்டி தற்போது ‘ஜெய் ஹனுமான்’ மற்றும் ‘தி பிரைட் ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here