மலேசியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்தில், தவளைகளும் தேரைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கவலை தெரிவித்துள்ளார்.ஆரோக்கியமான சூழல் மண்டலத்தைப் பராமரிப்பதில் பெரும் பங்காற்றும் இந்த இருவாழ்விகளைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். உலகின் 17 பெரும் பல்லுயிர் பெருக்க நாடுகளில் ஒன்றான மலேசியாவில் மொத்தம் 254 வகையான தவளைகளும் தேரைகளும் உள்ளன. மலேசிய பல்லுயிர் தகவல் அமைப்பின்படி, இவற்றில் 111 இனங்கள் தீபகற்ப மலேசியாவிலும், 182 இனங்கள் சபா, சரவாக்கிலும், 39 இனங்கள் இரு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
பூச்சிக் கட்டுப்பாடு: கொசுக்கள், ஈக்கள் மற்றும் வண்டுகளை உண்பதன் மூலம் டெங்கி, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதைத் தவளைகள் தடுக்கின்றன. ஒரு தவளை குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான பூச்சிகளை உட்கொள்ளும் திறன் கொண்டது.பறவைகள், பாம்புகள் மற்றும் பாலூட்டிகளுக்குத் தவளைகள் முக்கிய உணவாக விளங்குகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியும், இயற்கைச் சமநிலையும் சீர்குலையும்.தவளையின் தலைப்பிரட்டைகள் குளங்கள் மற்றும் ஓடைகளில் உள்ள பாசிகள், மக்கும் கரிமப் பொருட்களை உண்டுநீரைத் தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன.

எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்:
காடுகள் மற்றும் ஈரநிலங்கள் அழிப்பு, பூச்சிக்கொல்லிகள், தொழிற்சாலைக் கழிவுகள், நெகிழி (பிளாஸ்டிக்) மாசுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் தவளைகளின் வாழ்விடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு வேண்டுகோள்
தவளைகளைப் பாதுகாப்பது நமது எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்வோடு தொடர்புடையது. எனவே, விவசாயிகள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு சிறிய உயிரினமும் இயற்கையின் சமநிலையைப் பேண அவசியமானது. தவளைகளைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தூய்மையான நீர், பூச்சிகள் இல்லாத சூழல் மற்றும் செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை நாம் உறுதி செய்ய முடியும் என்ற காதர்.
செ.குணாளன்








