பினாங்கில் குடிநுழைவுத் துறை அதிரடி வேட்டை: குழந்தைகள் உட்பட 53 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

பினாங்கு:

பினாங்கில் குடிநுழைவுத் துறையினர் நேற்று நடத்திய ‘Ops Kutip’ மற்றும் ‘Ops Sapu’ ஆகிய அதிரடிச் சோதனைகளில், குழந்தைகள் உட்பட மொத்தம் 53 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்களைக் கண்டறியும் நோக்கில், உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 21 ஆண்களும் 32 பெண்களும் பிடிபட்டனர். இவர்களில் 5 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்குவர்.

பண்டார் பிராய் ஜெயாவின் பிளாக் டி2 (Block D2) குடியிருப்பு வளாகம் மற்றும் அங்குள்ள வணிகப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் ஜார்ஜ் டவுன், ஜாலான் மஸ்ஜிட் நெகிரி (Jalan Masjid Negeri) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 8 இந்தோனேசியப் பெண்கள் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகவும், குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் கீழ் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகவும் ஜுரு (Juru) குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டவிரோதக் குடியேறிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் இத்தகைய கடுமையான சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று பினாங்கு மாநில குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here