மலேசியாவிலிருந்து ‘பாக் குவா’ எனப்படும் பன்றி இறைச்சித் துண்டுகளைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவரக்கூடாது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
தற்போது நடப்பிலிருக்கும் சட்டத்தின்கீழ், மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று திரும்புவோர் தனிப்பட்ட பயன்பாட்டுக்காகப் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை வாங்கிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மலேசியா இன்னும் இடம்பெறவில்லை என்று SFA கூறியது.
ஜோகூரிலிருந்து ‘பாக் குவா’ கொண்டுவருவதில் சந்தித்த சிரமங்கள் குறித்துப் படங்களுடன் சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததை அடுத்து, ஜனவரி 18ஆம் தேதி, சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நினைவூட்டலைப் பதிவிட்டது.
சீனப் புத்தாண்டுக்காக வாங்கிய இறைச்சிப் பொருள்களில் சிலவற்றைச் சுங்கச் சோதனைச் சாவடியில் தூக்கி வீச நேர்ந்ததாக ஃபேஸ்புக் பயனாளர்கள் சிலர் பதிவிட்டிருந்தனர்.
தற்போது ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று திரும்பும் சுற்றுப்பயணிகள் ஆளுக்கு ஐந்து கிலோகிராம் பன்றி இறைச்சித் துண்டுகளைக் கொண்டுவர அனுமதி உண்டு என்பதை சிங்கப்பூர் உணவு அமைப்பு ஜனவரி 18ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.




















