“இது நம் நாட்டின் கடமை!” – கோலாலம்பூரிலிருந்து நள்ளிரவில் காரில் வந்து ஜோகூரில் வாக்களித்த இளைஞர்கள்!

கோலாலம்பூர்:

16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி அளவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய வேளையில், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் மற்றும் முதியவர்கள் விடியற்காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

கோலாலம்பூரில் கல்லூரியில் பயிலும் சென் ஷெங் (21) மற்றும் அவரது நண்பர் ஷான் ஷெங் (21) ஆகிய இரு இளம் வாக்காளர்கள், வாக்களிப்பதற்காகவே நள்ளிரவு 2 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து காரில் புறப்பட்டு, காலை 5.30 மணிக்கு ஜோகூர் பாரு வந்தடைந்துள்ளனர். நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தைக் கொண்டு வர ஒவ்வொரு மலேசியரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், தங்களுக்கு இது முதல் முறை என்பதால் சற்று பதற்றத்துடனும் அதே சமயம் ஆர்வத்துடனும் வாக்களிக்க வந்ததாக அவர்கள் கூறினர்.

தாமான் பெலாங்கி இண்டாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரரான அப்துல் ரசாக் உசேன் (66) என்பவர் கூறுகையில், இ-ஹெய்லிங் (e-hailing) வாகனம் மூலம் தனியாக வந்து தனது வாக்கினைப் பதிவு செய்ததாகவும், நாட்டின் எதிர்காலத்திற்கு வாக்கு செலுத்துவது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் அனைவரும் மாலை 6 மணிக்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புத்தி ரி வாங்சா (Puteri Wangsa) சட்டமன்றத் தொகுதியில் உள்ள தாமான் மோலெக் தேசியப் பள்ளியின் வாக்குச்சாவடியில் காலையிலேயே சுமார் 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திரண்டனர். இத்தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் (பாக்காத்தான் ஹரப்பான்), தியோ சியா லிங் (பாரிசான் நேஷனல்) உட்பட ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 128,723 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதி மிகக் கடுமையான போட்டிக் களமாகக் கருதப்படுகிறது.

இன்று நடைபெறும் இந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில், 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மொத்தம் 2.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,076 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது.

-NST-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here