லண்டன்: ராணி எலிசபெத் உடல் லண்டனில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ள நிலையில், இறுதி அஞ்சலிக்கு இங்கிலாந்து தயாராகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்த ராணி 2ம் எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இவரது இறுதி சடங்கு வரும் 19ம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.. அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்துவதற்காக எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் அரசியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
ராணியின் இறுதி சடங்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் வரும் 19ல் நடக்கிறது.அதன்பின், லண்டனுக்கு வெளியே விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், ராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே ராணி எலிசபெத்தின் உடல் புதைக்கப்பட உள்ளது.. இறுதி சடங்கு உள்ளிட்ட அரச குடும்பத்து சம்பிரதாயங்களை பகிங்ஹாம் அரண்மனை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
லண்டனில் உள்ள பகிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ராணியின் உடல், நாளை மறுநாள் வரை அங்கு வைக்கப்படும். நாளை மறுநாள் ஊர்வலமாக புறப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.. இறுதி சடங்கு நடக்கும்தினம் வரை, ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரும் 19ம் தேதி ராணியின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில், அரச குடும்பத்து உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இறுதி சடங்கில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அந்நாட்டின் வெளிநாட்டு மற்றும் பொதுநல மேம்பாட்டு அலுவலகம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, தலைவர்கள் தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களில் வருவதை தவிர்த்து பயணிகள் விமானத்தில் வரும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரும்போது தங்களது அரசுக்கு சொந்தமான கார்களில் வராமல், மேற்கு லண்டனில் இருந்து பேருந்தில் வர வேண்டும் என்றும் இறுதி சடங்கு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் இட நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, நாட்டின் மூத்த பிரதிநிதி மற்றும் அவரது மனைவிக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணியின் மறைவையொட்டி, இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், குடியரசுத் தலைவர் மாளிகையிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.. மேலும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, ராணி எலிசபெத் மறைவுக்காக துக்கம் அனுசரிக்கப்பட்டது.. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.





















