புதிய மொந்தையில் பழைய கள்

 

பி.ஆர்.ராஜன்

மலேசிய இந்தியர் சமூகப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்தும் நோக்கத்தில் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) உருவாக்கப்பட்டது.

தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது  செடிக் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இப்பிரிவு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் ஒற்றுமைத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட பொன்.வேதமூர்த்தி இதற்கு மித்ரா என  ,பெயர் மாற்றம் செய்தார்.

செடிக் பிரதமர் இலாகா நேரடிப் பார்வையில் செயல்பட்டது. மித்ரா ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டது. பின்னர் மடானி அரசாங்கம் பொறுப்பேற்றதும் மித்ரா மீண்டும் பிரதமர் இலாகா கீழ் கொண்டு வரப்பட்டது. இப்போது இப்பிரிவு மீண்டும் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ்   வைக்கப்பட்டிருக்கிறது.

மித்ரா பிரதமர் இலாகா கீழ்தான் இருக்க வேண்டும் என்று சமுதாயத்தின் பெரும்பான்மையானோர் கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

மித்ரா அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மிகப் பெரிய ஒரு போராட்டமே நடத்தப்படுகிறது. இன்றளவும் அது ஓய்ந்தபாடில்லை. சமுதாய மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த பிரிவு தற்போது சில தனிநபர்களின் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

மித்ராவுக்கு ஏற்கெனவே இலக்குகளும் குறிக்கோள்களும் லட்சியங்களும் வகுக்கப்பட்டு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஒற்றுமை அமைச்சின் கீழ் இந்திய சமுதயாத்திற்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொள்வதற்காக கடந்த மார்ச் 20, 21 ஆகிய இரு தினங்கள் ஒற்றுமை அமைச்சு ஒரு பட்டறையையும் ஆய்வையும் நடத்தியது. ஆனால் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதுதான் தெரியவில்லை.

இவற்றை நடத்தும் பொறுப்பை சரவாக்கை சேர்ந்த பெமாண்டு என்ற ஒரு தனி நிறுவனம் பொறுப்பேற்றது. கிட்டத்தட்ட 3லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலான ஒரு தொகை அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை மித்ரா நிதியிலிருந்து வழங்கவில்லை. ஒற்றுமைத்துறை அமைச்சின் நிதியிலிருந்துதான் இத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்திய சமுதாயத்தின் பல்வேறு தரிப்பினர் அவர்களின்  கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த பட்டறையின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? இந்திய சமுதாயத்திற்கு என்ன தேவை என்பது முழுமையாக தெரிந்து கொள்ளப்பட்டதா? அடுத்தகட்ட திட்டங்கள் என்ன என்பது பற்றிய எந்தவோர் அறிக்கையும் வௌியிடப்படவில்லை.

ஆனால் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவைதான் அங்கு நிறையை பேசப்பபட்டன என்ற தகவல் கசிந்திருக்கிறது. ஒரு தனிநபரின் பின்புலத்தில் கவனம் செலுத்தப்படாமல் அனைத்துத் தரப்பினருக்கும் உதவிசெய்து அவர்களை வாழ்க்கையில் கைதூக்கி விட வேண்டும் என்பதுதான் மித்ராவின் இலக்கு–நோக்கம் .

தரமான கல்வி, வாழ்நாள் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சமூக நலத் திட்டங்கள் , வணிக– வர்த்தக வாய்ப்புகள், தனிநபர் திறன் வாய்ப்புகள், சமூக நல்வாழ்வு போன்றவை மித்ராவின் தலையாய இலக்காக ஏற்கெனவே இருந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக நடத்தப்பட்ட பட்டறையில் ஆய்வில் இதற்கு மாறான வேறு மேம்பாட்டுத திட்டங்கள் விவாதிக்கப்பட்டனவா? அவை யாவை? அவற்றின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்திய சமுதாயம் மிக ஆர்வமாக இருக்கிறது.

இந்த பட்டறையில், ஆய்வில்  கலந்து கொண்ட சிலர் ஒரு காணொளி வழி மித்ராவின் இலக்குகள் குறித்து தனித்தனியாக பேசி வருகின்றனர். அனைத்துமே அரைத்த மாவையே மீண்டும் அரைப்பது போல்தான் இருக்கிறது. புதிய மொந்தையில் பழைய கள் என்பதாகத்தான் உள்ளது.

இவர்கள் அனைவரும் யாரோ ஒரு தனிநபருக்காக பின்னணிக் குரலாக செயல்படுகின்றனர் என்பதைத்தான் இந்த காணொளிகள் உணர்த்துகின்றன.

2024ஆம் ஆண்டு பிறந்து மூன்று மாதங்கள் நிறைவு  பெற உள்ளன. 2024 மத்திய அரசாங்க பட்ஜெட்டில் மித்ராவுக்காக வழக்கம்போல் 10கோடி ரிங்கிட் (100 மில்லியன்) ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு 2025 பட்ஜெட் நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே முழுமையாக செலவழிக்கப்பட வேண்டும். செலவழிக்கப்படாத தொகை அரசாங்கத்திற்கு திருப்பித் தரப்பட வேண்டும்.

நிலைமை இவ்வாறு இருக்க அண்மையில் நடைபெற்ற மித்ரா பட்டறை, ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 10கோடி ரிங்கிட் எப்போது விநியோகம் செய்யப்பட இருக்கிறது? யார் யாருக்கு இந்த நிதி போய்ச் சேரவிருக்கிறது?

வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த தொகை முழுமையாக கொடுத்து முடிக்கப்படுமா?. இன்னும் எஞ்சியிருப்பது கிட்டத்தட்ட 6 மாதங்களே ஆகும். அதற்குள்ளாக 10 கோடி ரிங்கிட் முழுமையாக இந்திய  சமுதாயத்தின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவதற்காக செலவிடப்படுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

மித்ரா சிறப்புப் பணிக்குழுவுக்கு புதிய தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.பிரபாகரனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமனம் செய்திருக்கிறார்.

இவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை செயல்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். மித்ரா சிறப்பு பணிக்குழுவின் இதர உறுப்பினர்களும் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்ற தகவலும் கசிந்திருக்கிறது.

உறுப்பினர்களின் நியமனத்தைக்கூட செய்யமுடியாத நிலையில் பிரபாகரன் வைக்கப்பட்டிருக்கிறார். பெயருக்கு ஒரு பதவியை கொடுத்து விட்டு கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டவராக பிரபாகரனின் நிலை இருக்கிறது.

நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். எங்களுக்கு ஆலோசனை சொல்வதோடு உங்களது கடமை முடிந்து விட்டது. மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சரவாக்கைச் சேர்ந்த ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் ஆணி அடித்ததுபோல் கூறியிருக்கிறார்.

இந்திய சமுதாயம் செய்த பாவம்தான் என்ன? கொடுக்கப்பட்டதை பெறக்கூட முடியாத பரிதாபத்தில் மலேசிய இந்திய சமுதாயம் ஏமாந்து போய் நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here