ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தீவிர தாக்குதல்- பதற்றம் அதிகரிப்பு

தெஹ்ரான்: போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா–ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த 60 நாள் இடைக்கால ஒப்பந்தம் பாதியிலேயே முறிந்தது. இதையடுத்து, அமெரிக்கா – ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் கேஷ்ம் தீவு மீது இன்று பிற்பகல் முதல் 10 முதல் 11 ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. கேஷ்ம் மாவட்ட ஆளுநர் ஹொசைன் அமிர் தெய்மூரி கூறுகையில், தாக்குதலுக்குள்ளான அனைத்தும் ராணுவ இலக்குகளாகும். இந்த தாக்குதலில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

ஈரானின் திறன் பாதிக்கும்

இதற்கிடையே, அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை வெளியிட்ட தகவலில், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட சுமார் 140 ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சமீப நாட்களை விட அதிக தீவிரத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறன் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு கட்டுப்பாடு இல்லை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “நேற்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம்” என்று தெரிவித்து இருந்தார்.கடந்த ஒரு வாரமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது, ஓமன் கடற்பகுதியை ஒட்டிய வழித்தடத்தில் ஈரான் தாக்குதல் நடத்தி வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.மேலும், “ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கடல் பாதையாகும். சட்டப்பூர்வமாக பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் அது திறந்தே உள்ளது. கடல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய அமெரிக்க படைகள் முழு தயார்நிலையிலும் உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரானுக்கு கட்டுப்பாடு இல்லை. கப்பல் போக்குவரத்து வழக்கம்போல நடைபெற்று வருகிறது” என்று அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்ட தாக்குதலால் கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததுடன், பல இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here