போர்ட் கிள்ளான் AKPS அதிகாரிக்கு கொலை மிரட்டல்

போர்ட் கிள்ளானில் அலுவல் பணிகளில் ஈடுபட்டிருந்த எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் (AKPS) அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்படுவார் என மிரட்டப்பட்டுள்ளார். போர்ட் கிள்ளான் AKPS தளபதி துணை ஆணையர் டத்தோ நிக் எசானி முகமது ஃபைசல், துறைமுகத்தில் ஒரு நிறுவனத்தின் முகவராகப் பணிபுரியும் நபர் இந்த மிரட்டலை விடுத்ததாகக் கூறினார்.

கிள்ளான் தெற்கு காவல் தலைமையகத்தில் இதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. குற்றம் செய்ததாகக் கண்டறியப்பட்ட எவர் மீதும் உரிய குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களை அவர்களின் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்கும் எந்தவொரு மிரட்டல், அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது முயற்சி ஆகியவை கடுமையான குற்றமாகும். அவை பொறுத்துக்கொள்ளப்படாது என்று துணை ஆணையர் நிக் எசானி கூறினார். சட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்தல் ஆகிய தங்களின் பொறுப்புகளை அதிகாரிகள் நிறைவேற்றும்போது, ​​அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பாதுகாப்பதில் AKPS உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here