கெடாவில், அலோர் ஸ்டார், குபாங் பாசு ஆகிய இடங்களில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில், அகதிகளிடமிருந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்திய சம்பவத்தில், ஜூலை 1 அன்று, காவலர் சீருடை மற்றும் ஜாக்கெட் அணிந்த ஒருவர் அலோர் செட்டாரில் உள்ள ஒரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாக மாநில காவல்துறைத் தலைவர் அட்லி அபு ஷா கூறினார் என பெரிட்டா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டிற்கு வந்ததும், சந்தேக நபர், புகார்தாரரிடம் தனது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையர் (UNHCR) அட்டை, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் அட்டைகளை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.இந்தச் சம்பவத்தை அகதி பதிவு செய்வதைத் தடுப்பதற்காக, சந்தேக நபர் அவரது கைபேசியைப் பறிமுதல் செய்ததாக அட்லி கூறினார்.
பின்னர், சந்தேக நபர் அகதியின் மனைவியிடம் அவரது தங்கக் காதணிகளை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதாகவும், அதை அந்தக் காவலர் தனது சட்டைப்பையில் போட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். “கைபேசி மற்றும் UNHCR அட்டைகளைத் திருப்பிக் கொடுத்த பிறகு, அவர் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.”பின்னர் அந்த அகதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் விளைவாக, கெடா காவல் படையைச் சேர்ந்த 26 வயது சந்தேக நபர் மறுநாள் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு குற்றப் பின்னணி இல்லை. எங்கள் விசாரணைக்காக அவரது காவல் அதிகார அட்டை, இரண்டு தொலைபேசிகள், ஒரு ஜோடி தங்கக் காதணிகள், ஒரு ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் பல பொருட்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்.”இந்த வழக்கு கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.மற்றொரு சம்பவம் ஜூன் 27 அன்று, பெரும்பாலும் ரோஹிங்கியா மக்கள் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் நிகழ்ந்ததாக அட்லி கூறினார்.
ஒருவர் தன்னை ஒரு காவலர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, வீட்டிற்குள் நுழைந்து “சோதனைகள்” நடத்திய பின்னர், RM1,750 பணத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார்.சந்தேக நபர் ஒரு காவலர், அவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார். ஆனால் அந்த வழக்கின் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.








