RM300,000 அரசு நிதி மோசடி: முன்னாள் அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர்:

பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து சுமார் RM300,000 அரசு நிதியுதவியை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் முன்னாள் அரசு ஊழியர் ஒருவருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல் (Remand) விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விண்ணப்பத்தை ஏற்று, 30 மதிக்கத்தக்க அந்த சந்தேக நபரை வரும் ஜூலை 17-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கக் கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்ற மஜிஸ்திரேட் நுருல் இசா ஹசான் பஸ்ரி இன்று உத்தரவிட்டார்.

நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் கோலாலம்பூர் MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்த அந்த முன்னாள் அரசு ஊழியர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையின்படி, சந்தேக நபர் கடந்த 2020 முதல் 2025 வரை அரசுப் பணியில் இருந்த காலகட்டத்தில் இந்த மோசடிச் செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியைப் பெறுவதற்காக, 11 நபர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றி அவர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு RM500 முதல் RM1,000 வரையிலான நிதியுதவித் தொகையைத் தனது சொந்த வங்கித் கணக்கிற்கு அவர் மாற்றியுள்ளார்.

இந்த முறைகேடான திட்டத்தின் மூலம் அவர் மொத்தம் RM300,000 வரை மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெற்றிகரமான கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் MACC இயக்குநர் முகமட் சக்குவான் தாலிப், இச்சம்பவம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 இன் பிரிவு 18-இன் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here