மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், ஜூலை 16 அன்று தொடங்கிய தனது தொண்டுப் பணியின் நிறைவாக, இன்று மூவாரில் உள்ள லமான் மகாராணியில் தனது 170 கி.மீ “Larian Kesyukuran” (நன்றியுணர்வு ஓட்டம்) ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அதிகாலை முதல் காத்திருந்த சுமார் 2,000 குடியிருப்பாளர்களின் உற்சாகமான வரவேற்புடன் அவர் காலை 9.15 மணிக்கு அங்கு வந்தடைந்தார் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
சையத் சாதிக், தனது ஓட்டத்தின் இறுதி 17 கி.மீ பகுதியை இன்று மலாக்காவில் உள்ள சிம்பாங் சுங்கை ராம்பாயில் இருந்து தொடங்கி, இலக்குப் புள்ளியை அடைந்தார். புத்ராஜெயாவில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தின் நோக்கம், மூவார் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள குடியிருப்பாளர்களின் நலனுக்காக நிதி திரட்டுவதாகும். இதில், தேவைப்படும் மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் டேப்லெட் சாதனங்கள் வழங்குவதும் அடங்கும்.
நான்கு நாள் தொண்டு ஓட்டம் மூலம் RM650,959 திரட்டப்பட்டதாகவும், இது ஆரம்ப இலக்கான RM200,000-ஐத் தாண்டியது என்றும் சையத் சாதிக் கூறினார். திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் மூவார் தொகுதி மக்களுக்கு நல உதவிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். குறிப்பாகக் கடைசி 10 கி.மீ. தூரத்தில் கிடைத்த அமோகமான பொது ஆதரவால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். ஒரு குழந்தையிடமிருந்து கிடைத்த 50 சென் உட்பட, பெறப்பட்ட ஒவ்வொரு பங்களிப்பையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்று அவர் கூறினார்.








