1991ஆம் ஆண்டு அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து வேலைப் பேரிடர் காப்புறுதித் திட்டத்தை அமல்படுத்த சொக்சோ அமைப்பிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தத் திட்டமானது தற்போது வேலைப் பேரிடர் திட்டமென அறியப்படுகின்றது.
தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் தொழில் சம்பந்தப்பட்ட பேரிடர் ஏற்பட்டால் உதவிகளை ஏற்படுத்தித் தரவும் இத்திட்டம் பிரத்தியேக முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு இந்தச் சட்டமானது விபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், கடுமையான நோய் என உடல் பாகங்களைச் செயலிழக்கக்கூடிய அசம்பாவிதங்களுக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கும் இயலாமைத் திட்டத்தை உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப்பட்டது.
காலப்போக்கில் சொக்சோ அமைப்பு தேசிய ஆள்பல கட்டமைப்பின் உருமாற்றத்திற்கு ஏற்ப சுயமாக வேலை செய்யும் நபர்களுக்குப் பாதுகாப்பை வழங்க சொக்சோ தனது சிறகை விரித்தது. 2017ஆம் ஆண்டு சொக்சோ அமைப்பு சுயமாக வேலை செய்பவர்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டப்பிரிவு 780 கீழ் சுய வேலை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தொடக்கமாக இந்தத் திட்டமானது பயணிகளுக்கான போக்குவரத்துத்துறையில் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் 20 வகையான சுயவேலைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

இந்நிலையில் வேலை இழந்த தரப்பினரைப் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு சொக்சொ அமைப்பு, 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சட்டப்பிரிவு 800 கீழ் வேலைக் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
முன்னோக்கிச் செல்லும் இத்திட்டமானது பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக கோவிட்-19 தொற்றுக் காலத்தில் சிரமங்களை எதிர்நோக்கியவர்களுக்குப் பெருமளவில் உதவிபுரிந்துள்ளது. அதேசமயம் அந்நியத் தொழிலாளர்களுக்காக சொக்சோ அமைப்பு 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 4 கீழ் வேலைப் பேரிடர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இது தவிர சந்தாதாரர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் ஒரு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு அது 2014ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்திற்கு துன் அப்துல் ரசாக் பெர்கேசோ மறுவாழ்வு மையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இம்மையம் உலகின் சிறந்த மறுவாழ்வு மையங்களுள் ஒன்றாகத் திகழ்வதோடு பணிக்குத் திரும்புங்கள் என்ற திட்டத்தின் வாயிலாக சந்தாதாரர்கள் மீட்சிபெற்று வேலைக்குத் திரும்ப மருத்துவம் மற்றும் திறன் சிகிச்சை இந்த மையத்தில் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2006ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பரிவுமிக்க சொக்சோ குழுவானது அந்த அமைப்பு மற்றும் சந்தாதாரர்கள் இடையே நல்லுறவை வலுப்படுத்த முக்கியப் பங்கு வகித்துள்ளது.
இந்தக் குழுவானது, சந்தாதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பேரிடரையும் அறிய சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளைக் கண்காணிப்பதோடு மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் இருந்தும் தகவல்களைச் சேகரிக்கிறது. தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் இக்குழு அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் வாரிசீகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட வேண்டிய இழப்பீடுகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்ய முனைகின்றது.

1971 ஜோகூர்பாருவில் முதலாவது பெர்கேசோ அலுவலகம்
இந்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தினைப் பாதுகாக்கவும் அவர்களின் நலனைப் பேணிக்காக்கவும் தேசியத் தலைவர்கள் சிலர் எண்ணம் கொண்டதை அடுத்து மலேசியாவில் சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் ஆலோசனை உருவானது.
வேலைப் பேரிடரில் இருந்து தொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாக்க சமூகப் பாதுகாப்பு அம்சம் உருவாக்கப்பட வேண்டும் என இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் மக்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டது. அதற்கு முன்னதாக அரசாங்கம் 1951ஆம் ஆண்டில் ஊழியர் சேமநிதி வாரியம் மற்றும் 1952ஆம் ஆண்டில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் ஆகியவற்றை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் 1958ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை வரையறுப்பதில் சமூகப் பாதுகாப்பு நிபுணர் டான்ஸ்ரீ ஏ.என்.அம்போ அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் வாயிலாக முக்கியப் பங்கு வகித்தார். அதன்பின்னர் அச்சட்டத்தை தொழிலாளர் மற்றும் ஆள்பல அமைச்சு பரிசீலனை செய்தது. 1962ஆம் ஆண்டு அப்போதைய தொழிலாளர் மற்றும் ஆள்பல அமைச்சர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் அந்த ஆய்வறிக்கையை ஓர் உயர்மட்ட செயற்குழுவுடன் இணைந்து பரிசீலனை செய்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அச்சட்டம் தாக்கல் ஙெ்ய்யப்பட்டு 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அதே ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி பேரரசரின் அனுமதியும் பெறப்பட்டது.

தொடர்ந்து 1971ஆம் ஆண்டு பெர்கேசோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. 1969 தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த கடமைகொண்ட ஓர் அமைப்பாக சொக்சோ அமைப்பு உருவாக்கப்பட்டது. பெர்கேசோ அமைப்பு முன்னதாக தொழிலாளர் மற்றும் ஆள்பல அமைச்சின் மேற்பார்வையில் செயல்பட்டது. அந்த அமைச்சு தற்போது மனிதவள அமைச்சு என அறியப்படுகிறது.
1972 ஜூன் 1ஆம் தேதி கோலாலம்பூர் டேவான் பகாசா டான் புஸ்தாக்காவில் நடைபெற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அறிமுக விழாவில் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக்குடன் தொழிலாளர் மற்றும் ஆள்பலத்துறை அமைச்ங்ர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம், அத்துறை துணையமைச்சர் டான்ஸ்ரீ லீ சான் சியோன் சொக்சோ அமைப்பின் தலைமை இயக்குநர் எஸ். குமார்.
ஜாலான் அம்பாங்கில் உள்ள மெனாரா சொக்சோ
இன்று அக்டோபர் 1.10.2021 சொக்சொ அமைப்பின் 50ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு கடந்தாண்டு இறுதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் அடுத்தாண்டு முழுவதும் தொடரப்படும். இந்நிகழ்ச்சிகள் சொக்சொ அமைப்பு, சந்தாதாரர்கள், முதலாளி தரப்பினர், சமூகத்தினர், முக்கியத் தரப்பினர் ஆகியோரிடையே உறவை வலுப்படுத்த நடத்தப்படுகின்றன.

பெர்கேசோ என்றால் பரிவு. பரிவு என்றால் பெர்கேசோ வாடிக்கையாளர் சேவைத்தரம் உயர்த்துதல்
பெர்கேசோ ஆய்வின் அடிப்படையில் முதலாளிகள் – தொழிலாளர்கள் என 16,681 பேருள் 90.97 விழுக்காட்டினர் இந்த அமைப்பின் சேவையைச் சிறந்தது, சீரானது மற்றும் பங்களிப்பு – கடமையை உணர்ந்தது என மதிப்பிட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெர்கேசோ அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதன் சேவை மீது மக்கள் திருப்தியடைந்துள்ளதை இது புலப்படுத்துகிறது.
Socso’s regional return to work DIGIMOS symposium 2021, International Public Employment Services symposium, MyFuture Expo ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய International Public Employment Forum 2021 மாநாடானது மலேசிய நிலை மற்றும் மலேசியாவின் சுழ்நிலை மற்றும் கோவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதார மீட்சி குறித்த கருத்துகளைப் பகிர வாய்ப்பளிக்கும் தளமாக விளங்கியுள்ளது.

முதல்நிலை வெற்றியாளர்: முகமட் ஹஃபிஸ் பின் அஸிஸான்
டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜாலா, பேராசிரியர் எலிஸபெத் லீ, தேசிய ஒலிம்பிக் ஜாம்பவான்கள் போன்ற முக்கிய நபர்களின் பங்களிப்பு வழி சொக்சொ அமைப்பு முதலாளிகள், தொழிலாளர்கள், எதிர்காலத் திறமைசாலிகள் ஆகிய தரப்பினரை வலுப்படுத்த முனைந்துள்ளது. இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 134,000 பங்கேற்பாளர்கள் மெய்நிகர் முறையில் கலந்துகொண்டதை அடுத்து சிறந்த வரவேற்பு கிடைத்தது.
வரலாற்றுப் பதிவை எடுத்துச் செல்வோம்
சொக்சொ அமைப்பின் 50ஆவது பொன் விழாவை முன்னிட்டு பிரத்தியேகப் பதிவுகள் வெளியிடப்படவுள்ளன. அவை 2021 சொக்சொ அமைப்பின் கார்ப்பரேட் தபால்தலை மற்றும் பொன்விழா நினைவாக நாணயம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவை போஸ் மலேசியா மற்றும் பேங்க் நெகாரா ஆதரவோடு உருவாக்கப்படும்.

குறிப்பாக 50 ஆண்டுகள் மற்றும் எப்பொழுதுமான பரிவுத்தன்மை என்ற கருப்பொருளை உள்ளடக்கிய தபாலோடு இந்தத் தபால்தலை இணைக்கப்படும். அதிலும் அந்த ஆல்பத்தில் நினைவு தபால்தலைப் படங்கள், 1973 ஜூலை 2ஆம் தேதி முதல் அச்சிடப்பட்ட தபால் உறை, தொழிலாளர் சந்தா அட்டை, 1971 பெர்கேசோ தபால்தலைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் அந்தத் தபால்தலை, நாணயங்கள் விற்பனைக்கு வெளியிடப்படவுள்ளன.

சொக்சோ செல்லும் திசை
மக்களின் சுபிட்சத்தைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை சொக்சொ அமைப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். சொக்சொ அமைப்பின் அடிப்படை நடவடிக்கையாக குறிப்பாக வியூக மேலாண்மை அம்ங்த்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. சொக்சோ தொடர்ந்து புதிய திட்டங்களை வரையறுத்து அறிமுகப்படுத்தும். சட்ட திருத்த நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பு பெறாத தரப்பினருக்கு இத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதோடு மக்களின் சமூகப் பாதுகாப்பையும் வலுப்படுத்த சொக்சொ முனைந்துள்ளது.





















