பெர்மிம் செயற்குழு HRD Corp தலைமை நிர்வாக அதிகாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி அமைப்பான மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவை பெர்மிம் நிர்வாகிகள், மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் ஷமிர் அப்துல் அசீஸை மரியாதை நிமித்தமாக சந்தித்து, இரு அமைப்புகளுக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

டமன்சாரா ஹைட்ஸில் அமைந்துள்ள விஸ்மா HRD Corp அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மரியாதை நிமித்த சந்திப்பில், பெர்மிம் தலைவர் முகமட் அஸ்மான் ஷா தலைமையிலான குழுவில் துணைத் தலைவரும் தொழில்முனைவோர் பிரிவு தலைவருமான பேராசிரியர் டாக்டர் நிஸாம் ஷா, துணைத் தலைவர் முகமட் நாசிர், பொதுச் செயலாளர் ஆடம் மாலிக் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ஷேக் முகமட் ஜமீல் ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த மரியாதை நிமித்த சந்திப்பின் போது, கடந்த 53 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம் சமூகத்தின் குரலாகவும் சமூக முன்னேற்றத்திற்காக செயல்படும் தேசிய அமைப்பாகவும் பெர்மிம் ஆற்றிவரும் பங்கு குறித்து HRD Corp நிர்வாகத்திடம் விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக, கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய மூன்று முக்கிய துறைகளில் இந்திய முஸ்லிம் சமூகத்தை வலுப்படுத்த இந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. பெர்மிம் தரப்பினரின் விளக்கங்களையும் முன்மொழிவுகளையும் கவனமாகக் கேட்ட டத்தோ முகமட் ஷமிர், அவற்றிற்கு மிகவும் நேர்மறையான பதிலை வழங்கியதாகத் பெர்மிம் தேசிய தவைவர் முஹம்மது அஸ்மான் ஷாஹ் கூறினார்.

இந்த மரியாதை நிமித்த சந்திப்பு தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதோடு, பெர்மிம் மற்றும் HRD Corp இடையே எதிர்காலத்தில் நெருக்கமான ஒத்துழைப்பிற்கான புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும், இந்த முயற்சி இந்திய முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை தேவைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும், அச்சமூகத்தின் நிலை மற்றும் பங்களிப்பை நாட்டின் பிரதான வளர்ச்சி நீரோட்டத்தில் மேலும் உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் என அஸ்மான் ஷாஹ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here