கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தில் ஆயுதக் கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘வினோத் கெங்’ (Vinod Gang) என்ற வன்முறைக் கும்பலின் தலைவன் உட்பட 11 பேர் மீது இன்று வெள்ளிக்கிழமை சிப்பாங் அமர்வு நீதிமன்றத்தில் (Sessions Court) முறைப்படி குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ஹுஸ்னா சுல்கிஃப்லி (Husna Dzulkifly) முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. இவ்வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டது (High Court jurisdiction) என்பதால், பிரதிவாதிகளிடம் எந்தவொரு வாக்குமூலமும் (Plea) பதிவு செய்யப்படவில்லை.
ஏப்ரல் 2024 முதல் ஜூன் 27, 2026 வரை தெலுக் பாங்லிமா காராங், பண்டார் ரிம்பாயு பகுதியில் சட்டவிரோதக் குற்றக் கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதற்காக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130V(1)-இன் கீழ் இவர்கள் அனைவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இக்கும்பலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் முஹம்மது வினோத் சக்திவேல் (30) என்பவருடன் சேர்த்து எம்.புவனேஸ்வரன் (34), லாரன்ஸ் ஆல்ஃபிரட் (34), ஜி.சங்கீதன் (31), எம்.நவீந்திரன் (29), எஸ்.ஸ்ரீதரன் (27), எம்.சுரேந்தர் (27), என்.ஏ.என்.விக்னேஸ்வரன் (27), ஜே.எம்.கிஷான் (24), ஆர்.ஷெர்வின்குமார் (23) மற்றும் டி.சார்வின் (21) ஆகிய 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இன்று காலை 9:00 மணியளவில், மலேசியக் காவல் துறையின் (PDRM) குற்றப் புலனாய்வுத் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் 11 சந்தேக நபர்களும் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அரசுத் தரப்பில் துாணை அரச வழக்குரைஞர்கள் சாவ் சியாங் காங் மற்றும் முஹம்மது ஷாரேசல் முகமது சுக்ரி ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் டி.மிஷாந்த் மற்றும் எஸ்.தேவன் ஆஜரானார்கள்.
வழக்கின் அடுத்தகட்டச் விசாரணைக்காக இந்நீதிமன்றம் வரவிருக்கும் செப்டம்பர் 14-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.
கடந்த ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புக்கிட் அமான் மற்றும் சிலாங்கூர் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து நடத்திய ‘ஓப் ரபிடோ’ சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2023 முதல் தீவிரமாக இயங்கி வந்த இக்கும்பல், கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவர்களது கைதின் மூலம் சிலாங்கூரில் நிலுவையில் இருந்த 21 தீவிர குற்ற வழக்குகள் முறியடிக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள இக்கும்பலின் மேலும் 5 உறுப்பினர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




















