செய்தி தொகுப்பு: வீ. ராஜேந்திரன்
பகாவ்,
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சனிக்கிழமை, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக, ஜெராம் பாடாங் தோட்ட மண்ணின் மைந்தரும், முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி. மணிவண்ணன் போட்டியிடுகிறார்.
கடுமையான போட்டி நிலவும் இத்தொகுதியில், அண்மையில் பெல்கிரா ரொம்பின் மற்றும் தாமான் ஸ்ரீ ரொம்பின் பகுதிகளில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜி. மணிவண்ணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவரது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இப்பகுதி மக்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் பக்கம் அதிகரித்து வருவதாக பல வாக்காளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜி. மணிவண்ணன், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் மக்கள் பிரச்சனைகள் குறித்து வாக்காளர்களிடம் கேட்டறிந்தார்.
குறிப்பாக, பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடத்தை புதிய இடத்தில் கட்டி முடிப்பது, தாமான் ஸ்ரீ ரொம்பின் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை, பஞ்சூர், சுங்கை ராயா, கிளேபாங் மற்றும் பத்து பெத்தி ஆகிய ஓராங் அஸ்லி கிராம மக்களின் குடிநீர் மற்றும் இணைய வசதி பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு வெற்றி பெற்ற பின்னர் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.




















