இனவாதப் பேச்சுக் குற்றச்சாட்டு: கெடா மந்திரி பெசார் சனூசி நோரிடம் விரைவில் காவல் துறை விசாரணை – ஐ.ஜி.பி தகவல்!

கோலாலம்பூர்:

ஜெம்போல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, இனவாதக் கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மத் சனூசி நோரிடம் காவல் துறை விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.

இத்தகவலை தேசியக் காவல் துறைத் தலைவர் (IGP) டான்ஸ்ரீ காலித் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சனூசி நோர் தற்போது கெடாவில் இருப்பதால், கோலாலம்பூர் புக்கிட் அமானைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் நேரடியாகக் கெடாவிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பூர்த்தி செய்தவுடன், மேல் நடவடிக்கைக்காக அது நாட்டின் சட்டத்துறை தலைமை அலுவலகத்திடம்  சமர்ப்பிக்கப்படும் என ஐ.ஜி.பி குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தேர்தல் இயக்குநராகச் செயல்பட்டு வரும் சனூசி நோர், அண்மையில் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை ஒன்று இனவாதத் தன்மையுடன் இருப்பதாகக் கூறி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சனூசி நோர், “தான் நாட்டின் வரலாற்றை மட்டுமே சுட்டிக்காட்டிப் பேசினேனே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது தனிநபரையும் அவர்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு கூறவில்லை” எனப் பின்னர் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here