ராமேஸ்வரி ராஜா
கோலாலம்பூர்,
மாறிவரும் டிஜிட்டல் பொருளா தாரச் சூழலுக்கு ஏற்ப நாட்டின் வரி விதிப்புக் கொள்கைகளும் நிர்வாகமும் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட வேண்டும் என இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
நேற்று, கோலாலம்பூர் கே.எல்.சி.சி. மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 26-ஆவது தேசிய வரி மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், புதிய வர்த்தக முறைகள், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப வரி அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகக் கூறினார்.
டிஜிட்டல் மயமாக்கல் சீர்திருத்தங்கள் காரணமாக உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) 1.009 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரியை வசூலித்துள்ளதாகவும், 52,000-க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் சுயவிருப்பத்தின் பேரில் தங்களின் வருமானத்தை அறிவித்துள்ளதாகவும் அமீர் ஹம்சா சுட்டிக்காட்டினார்.
மேலும், 2026-ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் 343.1 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த நிதி கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் விளக்கினார்.
வெளிப்படையான வரி நிர்வாகம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், புதிய தொழில்துறை முதன்மைத் திட்டம் 2030, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற திட்டங்களுக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்வில் துணை நிதியமைச்சர் லியூ சின் தோங், உள்நாட்டு வருவாய் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அபு தாரிக் ஜமாலுடின் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
























