இன்று காலை பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாலான் மெக்கலிஸ்டர் சாலையில் ஒரு பெரிய மரம் விழுந்து கார் நசுக்கியதில், மூவர் மரணத்திலிருந்து தப்பினர். காலை 9.12 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது. முதலுதவிப் படையினர் வருவதற்கு முன்பே, பொதுமக்கள் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டதாக அது கூறியது.
மேலும், 66 மற்றும் 68 வயதுடைய தம்பதியினர் மற்றும் ஒன்பது வயது சிறுமி உட்பட, பாதிக்கப்பட்ட மூவரும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது மேலும் கூறியது. பின்னர், தீயணைப்புத் துறையும், பினாங்கு தீவு நகர சபை மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து, சாலையை முழுவதுமாக மறித்திருந்த விழுந்த மரத்தை அகற்றினர். பிற்பகல் 12.10 மணிக்குச் சாலை மீண்டும் திறக்கப்பட்டது.









