கோலாமுடா:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) தெற்கு நோக்கிச் செல்லும் சாலையின் 77.6 ஆவது கிலோ மீட்டரில் உள்ள வழிகாட்டி பலகையில் வாகனம் மோதியதில் லோரி உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த முகமட் சுல்ஃபிக்ரி சுனைடி அப்துல்லா (20) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கோலாமுடா காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
மாலை 5.30 மணியளவில், 33 வயது நபர் ஓட்டிச் சென்ற லோரி பெந்தோங்கில் இருந்து சுங்கை பட்டாணி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் உள்ள வழிகாட்டி பலகையில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அவர் சொன்னார்.
“விபத்தின் தாக்கத்தால், முன்பக்கத்தில் அமர்ந்திருந்த செங்கராங், ஜோகூரைச் சேர்ந்த லோரி உதவியாளர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அதேநேரம் சரவாக்கின் செரியான் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரும், சபாவின் கெனிங்காவைச் சேர்ந்த மற்றொரு 24 வயது உதவியாளரும் தலை மற்றும் காலில் காயம் அடைந்தனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தல் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
























