குழந்தைகள் பாதுகாப்புக் குறியீடு: குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும்-வயது சரிபார்ப்பு நடவடிக்கைகள் ஜூன் 1 முதல் அமல்!

சைபர் ஜெயா:

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி), இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 (ONSA) இன் கீழ் வெளியிடப்பட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குறியீடு (சிபிசி), அபாயக் குறைப்பு குறியீடு (ஆர்எம்சி) ஆகியவை நேற்று ஜூன் 1 முதல் முதல் அமல்படுத்தப்பட்டது. இது, மலேசியாவில் உள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்குவதற்கான முக்கிய முன்னேற்றமாகும்.

சிபிசி, உரிமம் பெற்ற சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வடிவமைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதையும், குழந்தைப் பயனர்களுக்கான வயதுக்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் கட்டாயமாக்குவதன் மூலம் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ONSA கீழ் உள்ள சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க, உரிமம் பெற்ற சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள், குறைந்தபட்ச வயது வரம்பான 16 வயதை அடிப்படையாகக் கொண்ட வயது சரிபார்ப்பு உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். வயது சரிபார்ப்பு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதிவுகள் அல்லது மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற நாடுகளின் தகுதிவாய்ந்த அதிகார அமைப்புகளால் வழங்கப்பட்ட சமமான பதிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2026 ஜூன் 1 முதல், உரிமம் பெற்ற சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்கள் மட்டுமே கணக்குகளைப் பதிவு செய்வதற்கும், அவர்களது வயதிற்கு ஏற்ற சேவை அம்சங்களை அணுகுவதற்கும் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போதைய பயனர்களைப் பொறுத்தவரை, வயது சரிபார்ப்பு நடவடிக்கை, தொடர்புடைய சமூக ஊடகச் சேவை வழங்குநர்களால் ஆறு மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் படிப்படியாக அமல்படுத்தப்படும். இந்தக் காலப்பகுதிக்குள் 16 வயதிற்குட்பட்டவர்கள் எனக் கண்டறியப்படும் தற்போதைய பயனர்களுக்கு அவர்களது புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட தரவுகளைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர் தொடர்புடைய சமூக ஊடகச் சேவை வழங்குநர்களால் கட்டுப்பாடுகள், இடைநிறுத்தம் அல்லது பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வயது சரிபார்ப்புத் தேவையானது Facebook, Instagram, TikTok, YouTube உள்ளிட்ட உரிமம் பெற்ற சமூக ஊடகச் சேவைகளுக்குப் பொருந்தும்.

இது இணையப் பாதுகாப்பு, குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான கவலைகள் மேலும் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. சிபிசி, ONSA-வின் கீழ் உள்ள சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க தங்களது தளங்களில் பயனுள்ள வயது சரிபார்ப்பு நடவடிக்கைகளை உரிய காலத்திற்குள் அமல்படுத்துவது உட்பட அனைத்து உரிமம் பெற்ற சமூக ஊடகச் சேவை வழங்குநர்களும் தங்களது கடமைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என எம்சிஎம்சி எதிர்பார்க்கிறது. இந்தத் தேவைகளுக்கு இணங்கத் தவறினால் அது தீவிரமாகக் கருதப்படுவதுடன், சட்டத்தின்படி ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆர்எம்சி இந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் கீழ் சேவை வழங்குநர்கள் அபாய மதிப்பீடுகள், உள்ளடக்கக் கண்காணிப்பு, பயனர் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், சேவை வழங்குநர்களின் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.

பாதுகாப்பான, பொறுப்பான இணையச் சூழலை உருவாக்குவதற்காக, எம்சிஎம்சி தொடர்ந்து பங்குதாரர்கள், தொழில்துறை தரப்பினர், சமூகத்துடன் இணைந்து செயல்படும்.

சிபிசி, ஆர்எம்சி தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை https://mcmc.gov.my/en/onsa/resources/frequentlyasked-questions இல் பார்க்கலாம் அல்லது https://www.mcmc.gov.my/en/onsa/under16 இணையதளத்திற்குச் செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here