LPT2 நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீறல்களை மறைக்க RM14,000 லஞ்சம் பெற்ற 2 போலீஸ்காரர்கள் கைது!

கோலாலம்பூர்:

கிழக்குக்கரை நெடுஞ்சாலை 2-இல் (LPT2) போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சுமார் RM14,000 லஞ்சப் பணம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு காவல்துறையினரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

30 வயதுடைய போலிஸ் காவலர் ஒருவர், நேற்று மாலை 5.30 மணியளவில் பகாங் மாநில MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மற்றொரு ரோந்துப் பிரிவு போலிஸ் அதிகாரியுடன் இணைந்து இந்த ஊழல் செயலில் ஈடுபட்டுள்ளார்.

லஞ்சத் தொகையானது நேரடியாகப் பெறப்படாமல், சந்தேகநபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மூன்றாம் நபர் ஒருவரின் வங்கிச் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை குவாந்தான் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மேஜிஸ்திரேட் எலினா ஒத்மான், சந்தேகநபருக்கு ஆகஸ்ட் 20 வரை 5 நாட்கள் தடுப்புக் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 11 அன்று ஏற்கனவே கைது செய்யப்பட்ட மற்றொரு 30 வயது ரோந்துப் பிரிவு போலிஸ் அதிகாரியின் தடுப்புக் காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், அவருக்கு மேலும் 4 நாட்கள் (ஆகஸ்ட் 19 வரை) தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இக்கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய பகாங் மாநில MACC இயக்குநர் முகமட் சுகோர் மஹ்மூட், இச்சம்பவம் குறித்து 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 17(a)-இன் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here