பண்டமாரானில் தீப்பற்றி எரிந்த லோரி பழுதுபார்க்கும் பட்டறை: பெண்டாமார் பிளாட் வாசிகள் அலறி அடித்து ஓட்டம்!

கோலாலம்பூர்:

ண்டமாரான் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள லோரி பழுதுபார்க்கும் பட்டறையில் சமையல் எரிவாயு மற்றும் தொட்டி (Gas Tank) பலத்த சத்தத்துடன் வெடித்ததில், அருகில் உள்ள பெண்டாமார் பிளாட் (Flat Pendamar) குடியிருப்பாளர்கள் நேற்றிரவு பெரும் பீதி அடைந்தனர்.

நேற்றிரவு தீ வேகமாகப் பரவியதையடுத்து, அங்குள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

“நாங்கள் வீட்டில் இருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் தீ பிடித்து எரிந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் அனைவரும் வீட்டை விட்டு ஓடினோம். நல்லவேளையாகப் பிளாட்வாசிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை,” என்று அப்பகுதிவாசி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்றிரவு 9.54 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவிப் பணிப்பாளர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.

உடனே போர்ட்கிள்ளான், தெற்கு கிள்ளான், வடக்கு கிள்ளான் மற்றும் அந்தாலாஸ் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 36 வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சுமார் 6,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அந்த லோரி பழுதுபார்க்கும் பட்டறை முற்றிலும் சேதமடைந்தது. அதில் இருந்த எரிவாயு உருளைகள் ஏற்றிச் செல்லப்பட்ட இரு 3-டன் லோரிகள், ஒரு ஃபோர்க்லிஃப்ட் (Forklift), இரு மோட்டார் சைக்கிள்கள், இரு டிரெய்லர் தலைப்பகுதிகள் (Trailer Heads), ஒரு டிரெய்லர் மற்றும் இரு எரிவாயுத் தொட்டிகள் ஆகியன தீயில் முற்றிலும் கருகின.

இரவு 10.30 மணியளவில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு, அடுத்த 35 நிமிடங்களில் முற்றிலும் அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் மற்றும் மொத்தச் சேத மதிப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here