பிரீமியர் லீக்: முதல் வெற்றியை பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்

பிரீமியர் லீக் தொடரில் இப்ஸ்விச் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற மென்செஸ்டர் யுனைடெட், தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், இப்ஸ்விச் டவுன் அணிகள் மோதின. இப்போட்டியின் 29ஆவது நிமிடத்தில் இப்ஸ்விச் டவுன் அணியின் லீப் டேவிஸ் கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

இதையடுத்து 40ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் புருனோ பெர்னாண்டஸ் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இதனால் முதல் பாதி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது பாதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. 56ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் ஹாரி மாகுவையர் அடித்த பந்து, இப்ஸ்விச் டவுன் வீரர் ஜேக்கப் கிரீவ்ஸ் மீது பட்டு திசைமாறி கோலானது (சொந்த கோல்).

இதனால் மென்செஸ்டர் யுனைடெட் 2-1 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து 61ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை புருனோ பெர்னாண்டஸ் கோலாக மாற்றி, அணியின் முன்னிலையை 3-1 என உயர்த்தினார். மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 68ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த புருனோ பெர்னாண்டஸ், தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.

இதையடுத்து 83ஆவது நிமிடத்தில் மத்தேயுஸ் குன்ஹா கோல் அடிக்க, மான்செஸ்டர் 5-1 என முன்னிலை பெற்றது. கூடுதல் நேரமான 90+1ஆவது நிமிடத்தில் இப்ஸ்விச் டவுன் அணியின் சுபா அக்போம் கோல் அடித்தார். இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பின்னடைவை சந்தித்திருந்த மென்செஸ்டர் யுனைடெட், இப்ஸ்விச் டவுனுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here