அபுதாபி: ரூ.4 கோடிக்கு ஏலம் போன அரியவகை பறவை

அபுதாபி, அபுதாபியில் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு அரிய வகை வெள்ளை நிற பால்கன் பறவை விற்கப்பட்டுள்ளது.

குதிரையேற்ற கண்காட்சி

அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கடந்த 28-ந்தேதி முதல் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வேட்டை மற்றும் குதிரையேற்றம் தொடர்பான சாதனங்கள், தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளன.

55 முன்னணி பண்ணைகள்

அதேபோல் பல்வேறு விலங்குகளும், பறவைகளும் ஏலத்தில் விடப்படுகின்றன. நடப்பு ஆண்டில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான 55 முன்னணி பால்கன் பறவை பண்ணைகள் பங்கேற்றுள்ளன.

ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு ஏலம்

தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கோலாகலமாக நடந்து வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில், அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட ‘கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்’ ரக வெள்ளை பால்கன் பறவை ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு விறுவிறுப்பான ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை நிறம்

நடப்பு ஆண்டின் கண்காட்சி ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்பனையான பெருமையை இந்த அரிய பறவை பெற்றுள்ளது. தூய்மையான வெள்ளை நிறம், 1 கிலோ எடை மற்றும் 16.5 அங்குலம் நீளம் கொண்ட இந்த கம்பீரமான பறவை, அதன் அழகிய தோற்றத்தினால் உலக முழுவதிலும் இருந்து வந்திருந்த பறவை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here